கைகளை குப்பி கெஞ்சிய பெண் – ரயிலை நிறுத்திய ஓட்டுநர்.. வைரலான வீடியோவால் எழுந்த விவாதம்!
ரயில் ஏற்கனவே வேகம் எடுக்கத் தொடங்கியதாகத் தெரியும் நிலையில், அந்தப் பெண் ஓடும் ரயிலை நோக்கி கைகூப்பி, தன்னை ஏற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து ரயில் வேகத்தைக் குறைப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அந்தப் பெண் இறுதியில் ரயிலில் ஏறினாரா என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை.
ஆகஸ்ட் 12, 2026: வந்தே பாரத் ரயில் புறப்பட்டுச் சென்ற நிலையில், தாமதமாக ரயில் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், ரயிலை நிறுத்துமாறு லோகோ பைலட்டிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோகோ பைலட் ரயிலை மெதுவாக்கியதாகத் தெரியும் நிலையில், அவரது செயல் மனிதாபிமானமா அல்லது சரியான நேரத்தில் வந்த பயணிகளுக்கு ஏற்படும் அநீதியா என்ற விவாதம் எழுந்துள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில், அதிகமான உடைமைகளுடன் பெண் ஒருவர் நடைமேடையில் நிற்பது தெரிகிறது. வந்தே பாரத் ரயில் புறப்படத் தொடங்கியதும், தான் ரயிலைத் தவறவிடக்கூடும் என்பதை உணர்ந்த அந்தப் பெண், கைகளை கூப்பியபடி லோகோ பைலட்டிடம் ரயிலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.
கைகளை குப்பி கெஞ்சிய பெண் – ரயிலை நிறுத்திய ஓட்டுநர்:
Missing the Vande Bharat train by just 60 seconds, a traveler desperately pleads with the engine driver to stop. pic.twitter.com/L28Fd8l37z
— King (@King_Ikshvaku) August 10, 2026
ரயில் ஏற்கனவே வேகம் எடுக்கத் தொடங்கியதாகத் தெரியும் நிலையில், அந்தப் பெண் ஓடும் ரயிலை நோக்கி கைகூப்பி, தன்னை ஏற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து ரயில் வேகத்தைக் குறைப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அந்தப் பெண் இறுதியில் ரயிலில் ஏறினாரா என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளப் பயனர்களிடையே மாறுபட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர், பயணியின் நிலையைப் புரிந்துகொண்டு லோகோ பைலட் ரயிலை மெதுவாக்கியதாகக் கருதி அவரது மனிதாபிமான செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், மற்றொரு தரப்பினர், பயணிகள் உரிய நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருவது அவர்களது பொறுப்பு என்றும், தாமதமாக வரும் ஒருவருக்காக ரயில்வே இயக்க நடைமுறைகளை மாற்றக்கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் இணைய வாசிகள்:
மேலும், சரியான நேரத்தில் வந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பயணத்துக்கு, மற்றொருவரின் தாமதம் காரணமாக இடையூறு ஏற்படக்கூடாது என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தாமதமாக வரும் பயணிகள் ரயிலை நிறுத்த முயற்சிப்பது அல்லது சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது போன்ற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதாபிமான அணுகுமுறைக்கும் ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நேர அட்டவணை நடைமுறைகளுக்கும் இடையிலான சமநிலை குறித்த விவாதத்தை இந்த சம்பவம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.