AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றும் ஏஐ தொழில்நுட்பம் – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை

AI Thought Reading Breakthrough : ஏஐ பல்வேறு அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றும் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இது பிறவியிலேயே பேச முடியாதவர்கள், பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றும் ஏஐ தொழில்நுட்பம் – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jun 2025 22:14 PM IST

மனித எண்ணங்களை நேரடியாக வார்த்தைகளாக மாற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய (Australia) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். இது மருத்துவ ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த புதுமையான கண்டுப்பிடிப்பு, பிறவியிலேயே பேச முடியாதோர் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நிலை காரணமாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த சிரமப்படுபவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தை சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சார்லஸ் சோவ் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வழிகாட்டியாக சின்-டெங் லின் மற்றும் டாக்டர் ஆஸ் லியோங் ஆகியோர் செயல்பட்டிருக்கின்றனர். இதற்காக, மருத்துவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) தொழில்நுட்பம் மூலமாக மனித மூளையின் அலைகளை பதிவு செய்து, அதனை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் போது, இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 128 எலக்ட்ரோடுகளுடன் கூடிய இஇஜி தொப்பியை டாக்டர் லியோங் அணிந்து, வார்த்தை எதையும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த நிலையில், ஏஐ மாடல் அவரது மூளையிலிருந்து பெறப்பட்ட சிக்னல்களை புரிந்துகொண்டு, “நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன், அது நான்தான்” என்ற வார்த்தைகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது. இது அந்த மாடலின் திறனை தெளிவாக காட்டுகிறது.

மருத்துவத்தில் மாற்றத்தை உருவாக்கும் தொழில்நுட்பம்

இந்த ஏஐ மாடல், பக்கவாதம், ஆட்டிசம், அல்லது வாய் பேச முடியாதவர்களுக்கும் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் பேச சிரமப்படுபவர்களுக்கும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் முக்கிய கருவியாக அமையக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனாலேயே, தகவல்தொடர்பு முறைகளை மீட்டெடுக்க வழி வகுக்கும்.

உலகளாவிய ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போகும் கண்டுபிடிப்பு

இதற்கு முன்பு, பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை சார்பில், தூக்கத்தின் போது EEG சிக்னல்களை பயன்படுத்தி, மூளையில் ஏற்படும் சிறிய மாற்றங்களை அடையாளம் காணும் ஏஐ கருவி ஒன்றும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது மூளை செயலிழப்பு அறிகுறிகளை துல்லியமாக கணிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டது.

இந்த வகை ஏஐ தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர். மனிதன் பேச முடியாத நிலையிலும், தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் சாத்தியமுள்ள எதிர்காலத்தை இந்த கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டுகிறது. மேலும் எதிர்காலத்தில் ஏஐ காரணமாக எதுவும் சாத்தியம் என்பதை இந்த ஏஐ தொழில்நுட்பம் நமக்கு எடுத்து சொல்கிறது. மனிதர்களின் வாழ்க்கையை ஏஐ எளிமையாக்கி வருகிறது. மேலும் மருத்துவ உலகில் ஏஐ தற்போது நுழைந்து அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறது. எதிர்காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்களை ஏஐ கண்டறிந்து குணப்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு உதாரணம்.

Follow Us