அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் – அப்படி என்ன ஸ்பெஷல்? விலை எவ்வளவு?
Trump unveils new smartphone : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சார்பில் அமெரிக்காவிலேயே உருவாகும் வகையில் டிரம்ப் மொபைல் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தவிருக்கிறது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த டி1 மாடல் போன் முழுக்க அமெரிக்காவிலேயே தயாராவிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) சார்பில் புதிய தொழில்நுட்ப முயற்சியாக டிரம்ப் மொபைல் (Trump Mobile) என்ற பெயரில் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் வயர்லெஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேட் இன் அமெரிக்கா என குறிப்பிட்டுள்ள இந்த மொபைல் டி1 என்ற மாடல் 2025, செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போதுள்ள வெளியாகியுள்ள விவரங்களின் அடிப்படையில் இது ஒரு சாதாரண ஸ்மார்ட்போனாக இல்லாமல் தற்போது மார்கெட்டில் கிடைக்கின்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் வித்தியாசமான அம்சங்களுடன், மக்களின் கவனம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அனைத்து பாகங்களும் முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தங்க நிறத்தில் டிரம்ப் மொபைல் – விலை இவ்வளவா?
டிரம்ப் மொபைல் வெளியிடும் டி1 மாடல் மொபைலின் விலை 499 அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,400 என்று கூறப்படுகிறது. போனின் வடிவமைப்பு தங்க நிறத்தில் காட்சியளிக்கிறது. தற்போது trumpmobile.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 100 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,300) டெபாசிட்டுடன் ப்ரீ-ஆர்டர் செய்யும் வசதி உள்ளது.
டிரம்ப் டி1 மொபைல் முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், பல தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த அறிவிப்புக்கு எதிராக சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிங் லாங் டாய் கூறியதாவது, இது முழுமையாக அமெரிக்காவில் தயாரிப்பது மிகவும் கடினம். தற்போது வரை இதனை பரிசோனை முறை கூட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதா என தெரிவிக்கவில்லை. மேலும் அமெரிக்காவில் முழுமையான ஸ்மார்ட் போன் உற்பத்திக்கு தேவையான வசதிகள் இல்லை. பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். அமெரிக்காவில் கூடுதலாக அசெம்பிள் செய்யப்படலாம்.




டிரம்பின் மொபைல் சேவை
இந்த மொபைலுக்கு இணையாக டிரம்ப் மொபைல் என்ற பெயரில் ஒரு வயர்லெஸ் சேவையும் அறிமுகமாகியுள்ளது. இதன் மாத சந்தா 47.45 டாலர் (சுமார் ரூ.3,940) என கூறப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் டேட்டா, இலவச சர்வதேச அழைப்புகள் மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட வாடிக்கையாளர் சேவை ஆகியவை அடங்கும். இதற்காக எந்த நெட்வொர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகவில்லை.
Trump T1 மொபைலின் தொழில்நுட்ப அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 6.78″ AMOLED டிஸ்பிளே, ஃபிரண்ட் கேமரா 16எம்பி, ரியர் கேமரா, 50எம்பி, 5000mAh பேட்டரி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிரசாசர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த போனின் விற்பனையில் டிரம்ப் நேரடியாக சம்பந்தப்படவில்லை. அவரது பெயரைப் பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்பகட்ட அளவில் முழுமையான அமெரிக்க உற்பத்தி இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.