யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது…பெரும் பரபரப்பு…என்ன காரணம்!
YouTuber Savukku Shankar Arrested: சென்னை திரைப்பட தயாரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதம்பாக்கம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர் . அவரை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஆயிஷா சாதிக் என்பவர் சென்னை காவல் ஆணையகரத்தில் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் யூடியூப் சவுக்கு சங்கர் தன்னிடம் அவதூறாக பேசி ரூ. 2 லட்சத்தை அபகரித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவருக்கு முறையான சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அதற்கு சவுக்கு சங்கர் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தோழியின் வீட்டில் இருந்த சவுக்கு சங்கர்
இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. இதைத் தொடர்ந்து, பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அவரது தோழியின் வீட்டில் சவுக்கு சங்கர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் வருவதை அறிந்த சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டில் உள்ளே இருந்தார்.
மேலும் படிக்க: தேமுதிக 234 தொகுதியில் போட்டியிட இலக்கு…பிரேமலதா விஜயகாந்த்!
கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார்
போலீசார் அவரிடம் கதவை திறக்குமாறு கூறினர். ஆனால், சவுக்கு சங்கர் கதவை திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரு கட்டத்துக்கு மேல் போலீசார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலியான வழக்கு பதிவு செய்து கைது
போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றிய போது, செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் சவுக்கு மீடியா செயல்படாமல் இருப்பதற்காக போலியான வழக்கில் கையாளாகாத திமுக அரசு என்னை கைது செய்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுகவே காரணம் என்று தெரிவித்தார். திரைப்பட தயாரிப்பாளர்களான ஆயிஷா சாதிக் மற்றும் மகேஸ் ரம்யா, வீரமணி ஆகியோர் இணைந்து ரிட்டன் ஃபாலோ என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.
திரைப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர்
இந்த படமானது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதற்கு தயாராக இருந்தது. இந்த படம் குறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் நுங்கம்பாக்கம் போலீசாரால் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட அஜய் வாண்டையார் என்பவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும், எனவே இந்த திரைப்படம் முழுவதும் போதை பொருள் விற்பனையில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும்…தவாக வேல்முருகன்!



