தேமுதிக 234 தொகுதியில் போட்டியிட இலக்கு…பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Vijayakanth Explained About DMDK Alliance: வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி குறித்த நிலைப்பாடும் மற்றும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதே இலக்காக உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த நினைவிடத்தில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் டிசம்பர் 28- ஆம் தேதி விஜயகாந்த் குருபூஜை விழா நடைபெற இருக்கிறது. இதில், தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களைத் தேடி மக்கள் ரத யாத்திரை மிக சிறப்பாக மூன்று கட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது.
தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு
இதே போல, கடலூரில் அடுத்த மாதம் ஜனவரி 9- ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிகவின் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். தேமுதிகவின் அடுத்த இலக்காக இந்த மாநாடு உள்ளது. இந்த மாநாட்டில், அனைவரும் எதிர்பார்த்தது போல தேமுதிகவின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும் படிக்க: முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?




தேமுதிகவின் தோழமை கட்சிகள்
அதன் பிறகு, தை மாதம் பிறப்பதால் தமிழக அரசியலுக்கும் நல்ல காலம் பிறக்கும். கூட்டணி தொடர்பாக தேமுதிகவின் மாவட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் தினமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். விஜயகாந்த் காலம் முதல் தற்போது வரை தேமுதிகவுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும் தோழமைக் கட்சிகளாக உள்ளன. அவர்களுடன் பேச்சு வார்த்தையையும் இருந்து வருகிறது.
கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை
ஆனால், கூட்டணி தொடர்பாக தற்போது வரை தேமுதிக எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உரிய நேரத்தில் நல்ல தகவலை தெரிவிப்போம். ஏற்கனவே, மண்டல மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் களத்தில் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக களத்தில் இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
234 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும்
யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, யார் வேட்பாளர்கள் என்ற விவரம் மட்டும் தேமுதிக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட உள்ளது. அதற்கு ஜனவரி 9 வரை காத்திருக்க வேண்டும். தேமுதிகவை பொருத்தவரை 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பதே இலக்காக இருக்கும். தற்போது வரை எந்த கட்சியும் தேமுதிகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாஜக வளர்வதற்கு கருணாநிதி தான் காரணம்…சீமான் ஆவேசம்!