தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: பணப்பட்டுவாடாவை கண்காணிக்கும் வருமான வரித்துறை
Income Tax Department: செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, டிசம்பர் 13 : தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க 30 வருமான வரித்துறை (IncomeTax Department) ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நட்சதத்திர விடுதி ஒன்றில் டிசம்பர் 12, 2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (Puducherry) வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் எழுதிய புத்தம் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் சிங் யாதவ், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணப்பட்டுவாடாவை தவிர்க்க 30 பேர் கொண்ட குழு
சென்னையில், புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு புதுச்சேரி வருமானவரித்துறை புலனாய்வு இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தவிர்க்க ஆறு மாதத்திற்கு முன்பே வருமான வரித்துறை கண்காணிப்பில் ஈடுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறை சார்பாக பணப்பட்டுவாடாவை கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்றார்.
இதையும் படிக்க : இந்த 23 நாட்களும் ரேசன் கடைகள் இயங்காது – வெளியான முக்கிய அறிவிப்பு




பெரிய அளவிலான பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பு
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 30 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனவைரும் வருமான வரித்துறை இயக்குநரின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் பணிகள் குறித்து ஆய்வறிக்கைகளை சமர்பித்து வருகின்றனர். குறிப்பாக அதிக தொகை பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை அவர்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனர் என்றார்.
இதையும் படிக்க : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை
மேலும் பேசிய அவர், இதற்காக மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் தமிழக காவல்துறையினருடன் இணைந்து இந்த கண்காணிப்பு பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை, ஜிஎஸ்டி உள்ளிட்ட அமைப்புகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து பணப்பட்டுவாடாவை தவிர்ப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வருமான வரித்துறையும் தனது பணிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.