“எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது”.. அன்புமணி தரப்பு பளார்!!
அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லி போலீஸ் துணை ஆய்வாளரிடம், ராமதாஸ் சார்பில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று புகார் மனு அளித்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை என அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை, டிசம்பர் 07: எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது எனவும், தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்காமல் தங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ராமதாஸ் கூற முடியாது என்று அன்புமணி ராமதாஸின் ஆதரவாளரான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமதாஸ் தரப்பு தாங்களே உண்மையான பாமக என்றும், அன்புமணி ராமதாஸ் தரப்பு தாங்களே உண்மையான பாமக எனவும் சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்தவகையில், தந்தை – மகன் இடையேயான இந்த பிரச்னை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதாவது, தலைமை தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை ஏற்றதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அவரை தலைவராக அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பு:
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பாமக தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதோடு, தலைவர் யார் என்ற விவகாரத்தை சிவில் நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது. அதோடு, பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 1 வரை தொடர்கிறது என முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், நிறுவனர் ராமதாஸையோ அல்லது அவரது மகன் அன்புமணியையோ கட்சியின் தலைவர் என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.




நீதிமன்ற தீர்ப்பால் கொண்டாட்டத்தில் ராமதாஸ் தரப்பு:
இதைத்தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தம்மிடம் இருந்து கட்சியைப் பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டெல்லி போலீஸ் துணை ஆய்வாளரிடம், ராமதாஸ் சார்பில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று புகார் மனு அளித்தார்.
எந்த நீதிமன்றம் சென்றாலும் வெல்ல முடியாது:
இந்நிலையில், மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார். மேலும், எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது எனவும், தீர்ப்பின் முழு விவரத்தை பார்க்காமல் தங்களுக்கு சாதகமாக உள்ளது என்று ராமதாஸ் கூற முடியாது என்றும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 வரை அன்புமணிக்கு தலைவர் பதவி காலம் இருப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. தீர்ப்பின் முழு விவரத்தையும் பார்க்காமல் தீர்ப்பு தங்களுக்கு சாதகம் என சொல்வது சரியல்ல. 18 வது பத்தியை 19வது பத்தியுடன் சேர்த்து படிக்க வேண்டும். 18 வது பத்தியை மட்டும் படித்துவிட்டு பேசக்கூடாது.
இதையும் படிக்க: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
தீர்ப்பில் கொண்டாட எதுவும் இல்லை:
ராமதாஸ் திறப்பு கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லவே இல்லை. அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை. அப்படி மாம்பழம் சின்னத்தை முடக்கினாலும் அதில் ராமதாஸ் தரப்பு வெற்றி என எப்படி சொல்ல முடியும். இதற்காகவா அவர்கள் போராடி வருகிறார்கள். எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெல்லவே முடியாது என்றார்.