தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!
2026 Assembly election: அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை டிசம்பர் 11 முதல் தொடங்க உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் செய்யப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மீண்டும் திறக்கப்படும்.
சென்னை, டிசம்பர் 07: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் வேலை மாநிலம் முழுவதும் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டைப் போலவே தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரே காலகட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை:
அந்தவகையில், தேர்தல் பணிகளுக்கான ‘முதல் நிலைச் சோதனை’ தொடர்பான கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாடு, புதிய மேம்பாடுகள் மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகள் குறித்து பெல் நிறுவன பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் ‘முதல் நிலைச் சோதனை’ எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.




டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு:
தொடர்ந்து, அரசு அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக சரிபார்க்கும் பணியை டிசம்பர் 11 முதல் தொடங்க உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மாவட்டங்களில் சீல் செய்யப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மீண்டும் திறக்கப்படும். தற்போதைய இயந்திரங்களில் இருந்த வாக்காளர் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு பொத்தானும் சரியாக செயல்படுகிறதா என்று பரிசோதிக்கப்படும். பழுதான இயந்திரங்களை சம்பந்தப்பட்ட பெல் பொறியாளர்கள் சரி செய்வார்கள்; சரி செய்ய முடியாவிட்டால் அவை அகற்றப்படும்.
இதையும் படிக்க : “அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!
வரும் நாட்களில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்:
இந்த சோதனையின் போது அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள். அனைத்து கணக்குகளும் பூஜ்யமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, சரியாக செயல்படும் இயந்திரங்களுக்கு ‘ஓகே’ என்று பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளுக்கான இயந்திரங்கள் மட்டும் திறக்கப்படாது. இந்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து விட்டன. வரவிருக்கும் நாட்களில் தேர்தல் பணிகள் மேலும் வேகமெடுக்க வாய்ப்பு உள்ளது.