Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும்…தவாக வேல்முருகன்!

Governor Post Should Be Completely Abolished: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநர் பதவிகள் முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும்…தவாக வேல்முருகன்!
ஆளுநர் பதவி முற்றுலும் நீக்கப்பட வேண்டும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Dec 2025 14:26 PM IST

சென்னை சைதாப்பேட்டை பகுதியில், மக்கள் முன்னணி சார்பில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் பதவி ஒழிப்பு முறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (டிசம்பர் 13) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உயர் பதவி நியமன விவகாரத்தில் தலையிடும் ஆளுநர் பதவி என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தை பயன்படுத்தக்கூடியதாக ஆளுநர் பதவி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் நிலையில், நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் பதவி தேவை இல்லை.

ஆளுநர் பதவியை நீக்கும் வகையில்…

நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு மனு அளிக்கும் சட்டம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆளுநரை நீக்க கோரிக்கை வைத்தாலும், அவரை நீக்க முடியாத ஓர் அதிகாரம் பெற்றவராக ஆளுநர் பதவி உள்ளது.

மேலும் படிக்க: பாஜக வளர்வதற்கு கருணாநிதி தான் காரணம்…சீமான் ஆவேசம்!

அதிகார வரம்பை மீறி செயலாற்றும் ஆளுநர்

இதனால், அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் தானாக ஆளுநர் நியமனம் செய்கிறார். இதேபோல பல்வேறு விஷயங்களில் தன்னுடைய அதிகார வரம்புக்கு மீறி செயலாற்றி வருகிறார். இதனால், ஆளுநர் பதவி என்பது தேவை இல்லாத ஒன்றாக உள்ளது.

60- க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டம்

இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் பதவியை நீக்க கோரி 60- க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள், தமிழ் தேசிய அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்தில் லோக் பவனும் வேண்டாம். ராஜ் பவனும் வேண்டாம். மக்கள் பவனே வேண்டும். ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் அராஜகம் எடுபடாத ஒரே நாடு தமிழ்நாடு ஆகும்.

2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும்

அரசியல் தெளிவு பெற்ற தமிழகத்தில் சங்பரிவார் அமைப்புகளின் சித்து விளையாட்டு எடுபடாது. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இது குறித்து முன்பே நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அதற்கான முடிவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை எஜமானர்களான பொது மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேமுதிக 234 தொகுதியில் போட்டியிட இலக்கு…பிரேமலதா விஜயகாந்த்!