மழையும் இருக்கு பனியும் இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: சென்னையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், டிசம்பர் 13, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், வரக்கூடிய நாட்களில் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் மழை பதிவு காண வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 14 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
அதே சமயத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 15, 2025 அன்று கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆளுநர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும்…தவாக வேல்முருகன்!
இந்த சூழலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், வரக்கூடிய நாட்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வேலூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் வரையிலும், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறையக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
அதிகாலையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு:
டிசம்பர் 16ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை, தற்போது நிலவி வரும் சூழலை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேமுதிக 234 தொகுதியில் போட்டியிட இலக்கு…பிரேமலதா விஜயகாந்த்!
சென்னையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.