ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
OPS And TTV Attempt To Merge NDA Alliance: தேசிய ஜனநாய கூட்டணியில் மீண்டும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காகவும் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்திருந்தார். நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ள நிலையில், அவர் எதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் எனவும், இந்த சந்திப்பின்போது, என்ன பேசப்பட்டது எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் நான் பங்கேற்க மாட்டேன் என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதேபோல, அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வமும் ஒருங்கிணைக்கப்பட்ட அதிமுக என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
பாஜகவின் கூட்டணி கணக்கு
இதோடு அதிமுக பொதுக்குழுவில் தனக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றும், அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தனக்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள் எனவும் ஓ. பன்னீர்செல்வம் எதிர்பார்ப்பில் இருந்தார். இதேபோல பாஜகவும் அதிமுகவை எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் நமது கூட்டணியில் வந்துவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தது. இந்த நிலையில் தான், அண்மையில் நடைபெற்ற அதிமுக பொது குழுவில், கூட்டணியில் இணையும் கட்சிகளை தீர்மானிக்கவும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால், பன்னீர்செல்வம் மற்றும் பாஜகவின் கனவும் சிதைந்தது.
மேலும் படிக்க: பாஜக வளர்வதற்கு கருணாநிதி தான் காரணம்…சீமான் ஆவேசம்!
ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன எடப்பாடி
இந்த நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியை பாஜக நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் நயினார் நாகேந்திரனுடன் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக் கொள்ள மாட்டேம் என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதேபோல, எந்தெந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம். எப்படி தொகுதி பங்கீடுகள் செய்யப்படும் என்பதையும் அதிமுகவே முடிவு செய்யும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.
கடும் அதிருப்தியில் பாஜக தலைவர்கள்
இதனை கேட்ட நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக நிராகரித்தால், அவர்களை பாஜகவில் கொண்டுவர அந்த கட்சி திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவு அந்த நுழைவாயிலுக்கும் தடை போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாஜக தேசிய தலைவர்களா ஜே. பி. நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோருடன் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தேஜகூட்டணிக்கு பின்னடைவு
எனவே, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள். எந்த கூட்டணியில் இணைய போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் வரும் அமித் ஷா கூட்டணி தொடர்பான முயற்சிகளை நல்லபடியாக முன்னெடுப்பார் என்பதே அவர்களின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க: முடிவை மாற்றிய ஓபிஎஸ்.. டிச.15ல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு.. டெல்லி பயணம் காரணமா?



