Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் சட்டசபை தேர்தல்: தவெக வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் விஜய்!!

TVK Vijay selecting candidates: சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

நெருங்கும் சட்டசபை தேர்தல்: தவெக வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் விஜய்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Dec 2025 10:12 AM IST

சென்னை, டிசம்பர் 13: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்படி, தேர்தல் நாள் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் சுற்றுப்பயணம் என அனைத்து கட்சிகளும் பம்பரமாக சுழன்று வருகின்றன. அந்தவகையில், இத்தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள தவெக எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விஜயகாந்த் போல முதல் தேர்தலிலேயே முக்கிய அந்தஸ்தை பெறுவாரா போன்ற பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. அதோடு, தேர்தலையே சந்திக்காத தவெக தற்போதே, பிரதான கட்சிகளான திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தமிழகத்தில் தொடங்கியது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை

ஜனவரி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டம்:

இதனிடையே, கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெகவின் செயல்பாடுகள் சற்று முடங்கியிருந்தது. பின்னர், பாதிக்கப்பட்டவர்களை சென்னை அழைத்து வந்து ஆறுதல் கூறிய விஜய், மீண்டும் தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கினார். அந்தவகையில், காஞ்சிபுத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் சந்திப்பை நடத்தினார். தொடர்ந்து, புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். தொடர்ந்து, அடுத்ததாக வரும் 18ம் தேதி ஈரோட்டில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் முன்னின்று கவனித்து வருகிறார். தொடர்ந்து, ஜன.2ஆம் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் நேர்காணல்:

இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் வேட்பாளர் தேர்வை நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். ஏற்கெனவே, 234 தொகுதிகளிலும் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள் மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களாக மாறும் தியேட்டர் உரிமையாளர்கள்:

இதில், சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட சில தொகுதிகளில் பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கும் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…அரசியல் பின்னணி என்ன!

கூட்டணிக்கு ரகசிய பேச்சுவார்த்தை:

இதற்கிடையே, கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை தவெக தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, தவெக அணியில் அமமுக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக மற்றும் பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.