Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Perambalur: கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை

பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகாவைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனிடையே அவரது மனைவி கவிதா, 6 மாத குழந்தையுடன், கணவன் இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Perambalur: கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை
தற்கொலை செய்த கவிதா
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Sep 2025 08:37 AM IST

பெரம்பலூர், செப்டம்பர் 16: பெரம்பலூர் அருகே கணவன் இறந்த துக்கம் தங்காமல் மனைவி, 6 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள தெரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகனான நீலகண்டன் என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் திருமணமானது. டிரைவராக பணியாற்றி வந்த நீலகண்டன் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு பனைமரத்தில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கடும் அவதிப்பட்டு வந்த நீலகண்டன் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் தற்கொலை செய்து கொண்டார்.

சோகத்தில் இருந்த மனைவி

அன்றைய தினம் நீலகண்டனின் மனைவியான கவிதா காலையில் பாடாலூரில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று விட்டு மதியம் வருவதற்குள் இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் மனைவியின் சேலையில் நீலகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்த நேரம் கவிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இப்படியான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. வள்ளுவன் என பெயரிடப்பட்ட அந்த ஆறு மாத கைக்குழந்தையுடன் தனது அண்ணன் கலியப்பெருமாள் வீட்டில் கவிதா வசித்து வந்தார்.

Also Read: சாத்தனூர் அணையில் இறங்கிய இளைஞர்… சட்டென கடித்து விழுங்கிய முதலை.. உயிரிழந்த சோகம்!

அதே சமயம் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் இருந்துள்ளார். அவரை தேற்றுவதற்கு குடும்பத்தினரும் உறவினர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

குழந்தையுடன் கவிதா தற்கொலை

இப்படியான நிலையில் நேற்று செப்டம்பர் 15 மாலை தெரணியில் உள்ள கணவர் நீலகண்டன் வீட்டிற்கு கவிதா தனது குழந்தையுடன் சென்றுள்ளார். வீட்டில் நீலகண்டன் தற்கொலை செய்துக் கொண்ட அறையில் தனது உடலிலும் குழந்தையின் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி திடீரென தீ வைத்துக் கொண்டார். இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் தீக்கிரையாயினர். மேலும் சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளுவன் உயிரிழந்தான்.  இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read:  கசந்த 5 ஆண்டு கால காதல்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)