விஜய்க்கு கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..
Former Minister Jayakumar: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “ அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்களைப் பயன்படுத்துவதால் அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு போகுமா? என்றால் அது ஒருபோதும் நடக்காது. அதற்கு வாய்ப்பு இல்லை. போய் வணங்கட்டும், போற்றட்டும்” என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

சென்னை, செப்டம்பர் 15, 2025: எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் படங்களைப் பயன்படுத்துவதால் அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு போகுமா? என்றால் அது நிச்சயம் நடக்காது; விஜய்க்கு ஏமாற்றமே கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரையில் உட்கட்சி விவகாரம் மிகவும் கடுமையாக உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும்” எனக் கூறி, இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் அவகாசம் அளித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்காமல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி:
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். அப்போது கட்சி விவகாரங்கள் குறித்து இருவரும் கேட்டறிந்ததாகவும், “என்ன நடக்கிறது?” என்பதை விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 16, 2025 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக டெல்லி செல்ல இருக்கிறார். இத்தகைய சூழலில், ஓ. பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் தினசரி தொலைபேசியில் பேசிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தினசரி நான் செங்கோட்டையன் இடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் – ஓ. பன்னீர்செல்வம்..
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அவர்,
விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சும்:
“செங்கோட்டையன் ‘மன்னிப்போம் மறப்போம்’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்ஜிஆர், அண்ணா ஆகியோர் தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் அந்த தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க விஷயம் தான்.
மேலும் படிக்க: பாமக தலைவர் அன்புமணி தான்… அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.. வழக்கறிஞர் பாலு பேட்டி!
ஆனால் அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்களைப் பயன்படுத்துவதால் அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு போகுமா? என்றால் அது ஒருபோதும் நடக்காது. போய் வணங்கட்டும், போற்றட்டும், பேருந்தில் அண்ணாவின் திருவுருவம், எம்ஜிஆரின் திருவுருவம் பதித்து கொண்டு போகட்டும். ஆனால் அது ஓட்டுகளாக மாறாது. அதிமுக ஓட்டுகள் விஜய்க்கு போகும் வாய்ப்பே இல்லை. அது விஜய்க்கு ஏமாற்றமாகவே முடியும்” என்று தெரிவித்தார்.
விஜய் என்னிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்:
மேலும் அவர், “மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விஜய் ‘அங்கிள்’ எனக் கூறினார். ஆனால் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ‘ஸ்டாலின் சார்’ எனக் கூறினார். என்னிடம் வந்து கேட்டிருந்தால் நான் கருத்து தெரிவித்திருப்பேன். முதலமைச்சர் ‘சார்’ என்று சொல்வதைவிட ‘CM சாத்தான் சார்’ என்று சொல்லியிருக்கலாம். அவருடைய மகன் உதயநிதியை ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ என்று சொல்லியிருக்கலாம்” எனவும் குறிப்பிட்டார்.