பாமக தலைவர் அன்புமணி தான்… அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.. வழக்கறிஞர் பாலு பேட்டி!
PMK Internal Issues : பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாகவும், அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் தான் கட்சியின் கொடியை பயன்படுத்த முடியும் எனவும் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில், பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கிய நிலையில், தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது.

சென்னை, செப்டம்பர் 15 : பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணியை (Anbumani Ramadoss) தலைவராக ஏற்றுக் கொள்வோர் மட்டுமே மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றார். கட்சி அன்புமணியின் தலைமையில் இருந்து இருக்கிறது எனவும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் பல மாதங்கள் நீடித்து வருகிறது. தனது பேரன் முகுந்துனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்ததில் இருந்தே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் இருந்து வருகிறது.
தனக்கே கட்சியில் முழு அதிகாரம் எனவும் நானே தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். தன்னுடைய பெயரை கூட அன்புமணி பயன்படுத்த கூடாது என ராமதாஸ் கூறி வருகிறார். மேலும், இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது.
Also Read : கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..
இந்த 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவரை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். மேலும், வேறு கட்சி வேண்டுமானாலும் அன்புமணி தொடங்கட்டும் என்றும் ராமதாஸ் கூறினார். ஆனால், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை என வழக்கறிஞர் பாலு தெரிவித்து இருந்தார். மேலும், கட்சி விதி மற்றும் தேர்தல் ஆணைய விதியின்படி, இது செல்லாது எனவும், பாமகவில் நிர்வாகிகளை நீக்க, சேர்க்க தலைவர் அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் எனவும் தெரிவித்து இருந்தார்.
பாமக தலைவர் அன்புமணி தான்
இந்த பிரச்னை தொடர்பாக அன்புமணி சார்பில் தேர்தலை ஆணையத்தில் முறையிட்டனர். இதற்கு தேர்தல் ஆணையம் கடிதம் வாயிலாக பதிலளித்துள்ளது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் அனுப்பி இருக்கிறது. இதன் மூலம் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தையும் அங்கீகரித்துளளது. 2026 ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தலைவர், செயலாளர் , பொருளாளருக்கான பதவிக் காலத்தை தேர்தல் ஆணையம் நீடித்துள்ளது.
Also Read : அன்புமணி நீக்கமா? எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? .. செப். 3ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கிறார்..
பாமக கட்சிக்கான மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்படுள்ளது. 2026 தேர்தலில் மாம்பழம் சின்னம் போட்டியிட உள்ளது. சமீப காலமாக இருந்த குழப்பங்கள் தீர்ந்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி தலைவராக ஏற்றால் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்த முடியும். அன்புமணி தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் தான் பாமகவினர். பாமகவின் நிறுவனராக ராமதாஸ் தொடர்வார்” என்று கூறினார்.