அன்புமணி நீக்கமா? எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? .. செப். 3ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கிறார்..
Ramadoss VS Anbumani Ramadoss: பாமக தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக முன்வைக்கப்பட்டு அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை பதிலளிக்காத நிலையில் வரும் செபடம்பர் 3, 2025 அன்று நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம், செப்டம்பர் 1, 2025: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 2025 செப்டம்பர் 3ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பார் என சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இதனால் கட்சியின் செயல்பாடுகளை இருவரும் தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் தனியாக குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல், 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தனியாக நடத்தப்பட்டது. இதில் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. இப்படியான சூழலில், கட்சி நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சியில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது.
Also Read: தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..
அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள்:
பாமக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை பதிலளிக்காத நிலையில், தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்றது. அப்போது குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
Also Read: சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அண்ணாமலை!
அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், 2025 செப்டம்பர் 1ஆம் தேதி தைலாபுரம் இல்லத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், அருள், ஸ்டாலின், பானுமதி, சத்துமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்புமணி மீது நடவடிக்கை – நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார்:
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள், “அன்புமணி பதிலுக்காக மேலும் இரண்டு நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். எனவே அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து 2025 செப்டம்பர் 3ஆம் தேதி தெரிவிக்கப்படும். அதேபோல், 2025 செப்டம்பர் 3ஆம் தேதி நிர்வாகக் குழுக் கூட்டம் கூடவிருக்கிறது. அதில் அன்புமணியைப் பற்றி விவாதிக்கப்படும். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்; அவரது முடிவே இறுதியான முடிவு” என தெரிவித்துள்ளார்.