சீனியாரிட்டியில் 9வது ஆள் டிஜிபி ஆனது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அண்ணாமலை!
Annamalai On New DGP Appointment : தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து திமுக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சென்னை, செப்டம்பர் 01 : தமிழகத்தின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன (Tamil Nadu DGP Venkatraman) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பு டிஜிபி நியமனம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை (Annamalai) கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், சீனியாரிட்டி அடிப்படையில 9வது இடத்தில் இருக்கும் வெங்கட்ராமனை முதல்வர் ஸ்டாலின் நியமித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காவல்துறையில் உச்சபட்ச பதவியாக டிஜிபி உள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதை ஓட்டி, அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்தது.
பொறுப்பு டிஜிபி நியமனம்
பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வினித் வாங்கடே, வன்னியப் பெருமாள்,சஞ்சய் மாத்தோர் ஆகியோரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக டிஜிபியாக பதவியேற்க இருப்பவரை, 6 மாதத்திற்கு முன்பாக பெயர் பட்டிலில் யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலில் மூன்று பேரை தேர்வு மாநில அரசுக்கு யுபிஎஸ்சி அனுப்பும். அதன் அடிப்படையில், டிஜிபியாக ஒருவரை மாநில அரசு நியமிக்க வேண்டும் என்பதே விதி. ஆனால், தமிழக அரசு சீனியாரிட்டில் உள்ள 9வது ஆளாக இருந்த வெங்கட்ராமனை நியமித்து இருக்கிறது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.. யார் இவர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!




இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பொறுப்பு டிஜிபி நியமனம் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் டிஜிபியாக பொறுப்பேற்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், பொறுப்பு டிஜிபியாகவே ஒருவர் பொறுப்பேற்று இருக்கிறார். தமிழகத்தில் அது நடந்துள்ளது.
அடுக்கடுக்கான கேள்வி கேட்ட அண்ணாமலை
சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றநிலையில், அடுத்த டிஜிபி பட்டியலில் 6 பேர் இருக்கிறார்கள். 6 பேரில முதல் மூன்று பேரில் ஒருவரை டிஜிபியாக பொறுப்பேற்றுக் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டிஜிபி பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தகுதியான மூன்று உறுப்பினர்களின் பட்டியலை மாநில அரசு அனுப்பியிருக்க வேண்டும்.
சீனியாரிட்டி பட்டியலில் முதல் இடத்தில் சீமா அகர்வால் இருக்கிறார். இவர் நமது ஆட்சிக்கு எதிராக இருப்பார்கள் என அவர்களை ஸ்டாலின் தேர்வு செய்யவில்லை. சீனியாரிட்டி பட்டியலில் இருந்த 8 பேரை தூக்கிவிட்டு, 9ஆவதாக இருக்கும் நபரை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது. சீனியாரிட்டி வரிசைப்படி தான் பதவி கொடுக்க முடியும். 9வது இடத்தில் இருப்பவருக்கு கொடுக்க முடியாது. இது இந்தியாவில் எங்காவது இப்படி நடக்குமா?
Also Read : ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின்.. வரவேற்ற தமிழர்கள்.. நெகிழ்ச்சி பதிவு!
தேர்தல் நேரத்தில் மட்டுமே, தற்காலிக டிஜிபிகள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ளபோதும் அது செய்யப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் எப்படி காவல்துறை சரியாக இருக்கும். பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும்? பொறுப்பு டிஜிபி பதவியேற்பில், அந்த 8 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா?” என விமர்சித்து இருந்தார்.