”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..
Annamalai On Vijay: நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டிகள் மாநாட்டில் பேசிய முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை பொது வெளியில் அங்கிள் என கூப்பிடுவது சரியல்ல. இப்போது பேசும் விஜய் கடந்த 50 ஆண்டுகளாக எங்கே இருந்தார் என பேசியுள்ளார்.

நெல்லை, ஆகஸ்ட் 22, 2025: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் பாஜகவின் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பதிலளித்தார். ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர், “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, “பாசிச பாஜகவுடன் கூட்டணி அமைக்க என்ன அவசியம்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
விஜயின் பலம் என்ன? அண்ணாமலை கேள்வி:
இந்த கேள்விகளுக்கு அண்ணாமலை இந்த கூட்டத்தில் பதிலளித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். விஜய் தன் மீது நம்பிக்கை வைத்து பேசினால் தான் அவரை தேடி மற்ற கட்சி தலைவர்கள் வருவார்கள். ஆனால், விஜய் தனது சொந்த பலத்தை இதுவரை வெளிப்படுத்தியதில்லை; பிற கட்சியின் பலத்தை மட்டும் கூறி வருகிறார்.
மேலும் படிக்க: திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..
2014, 2019, 2024 — தொடர்ந்து மூன்று முறை பாஜக வெற்றி பெற்று வருகிறது. வெற்றி பெறாத மாநிலங்களிலும் கூட பாஜக வாக்கு விகிதத்தை உயர்த்தியுள்ளது. மக்களைப் பொறுத்தவரையில் பாஜக ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 18% மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். தமிழக வெற்றி கழகமும் பாஜகவும் சித்தாந்த ரீதியில் நேர் எதிராக உள்ளன.
இப்போது கச்சத்தீவு குறித்து விஜய் ஏன் பேசுகிறார்?
திரைப்படங்களில் மீனவராக நடித்த விஜய் அப்போது கச்சத்தீவு குறித்து எதுவும் பேசவில்லை. இப்போது தான் பேசுகிறார். கச்சத்தீவை மீட்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நாம் முன்மொழிவுகளை அளித்துள்ளோம். நடுக்கடலில் மீனவர்கள்மீது நிகழும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். இவை விஜய்க்குத் தெரியாது.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது – அண்ணாமலை..
தாய்மாமன் என கூறும் விஜய் கடந்த 50 ஆண்டுகளாக எங்கே போனார்?
மேலும், சமீபத்திய மாநாட்டில் எல்லோருக்கும் தாய்மாமன் என்று கூறிய விஜய் — கடந்த 50 ஆண்டுகளாக எங்கு இருந்தார்? எத்தனை சகோதரிகளின் திருமணங்களில் பங்கேற்றார்? எத்தனை வீடுகளில் விசேஷங்களில் கலந்து கொண்டார்? அப்போது தாய்மாமன் எங்கு போனார்? அவர் நடித்த படங்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியிருக்கிறாரா? இல்லையே, பணம் வாங்கி தான் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆகவே ‘தாய்மாமன்’ என்ற வார்த்தையை யோசித்து பயன்படுத்த வேண்டும்.
முதலமைச்சரை பார்த்து அங்கிள் என கூப்பிடுவதா?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மேடையில் பேசும் போது அவரை ‘அங்கிள்’ என்று கூறுவது சரியானதல்ல. அந்த வார்த்தையைத் திரும்பப் பயன்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? நாளை திமுக அமைச்சர்கள் யாராவது விஜயிடம் — ‘51 வயது, நீங்கள் பூமர் மாதிரி பேசுகிறீர்கள்’ என்றால் விஜயின் மனது கஷ்டப்படும் இல்லையா? சில வார்த்தைகளை சில இடங்களில் பயன்படுத்துவதற்கு முன் மக்கள் பக்குவத்தை எதிர்பார்க்கிறார்கள். பக்குவம் இல்லாமல் எப்படி முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்?” என அண்ணாமலை பேசியுள்ளார்.