ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பதவி.. பா.ம.கவில் அதிரடி டிவிஸ்ட்..
PMK Ramadoss Daughter Srikanthi Posting: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பாமக நிர்வாக குழுவில் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 22, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இது முடிவுக்கு வராத நிலையில், இருவருமே கட்சியின் பணியை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மகள் ஸ்ரீகாந்திக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த பொதுக்குழுவின் போது மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இதனால் கடுப்பான அன்புமணி, மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டுத் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து, பனையூரில் கட்சி அலுவலகம் தொடங்குவதாக தெரிவித்திருந்தார். அப்போது தொடங்கிய இந்த மோதல் பல்வேறு கட்டங்களுக்கு நகர்ந்து சென்றது. குறிப்பாக கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அன்புமணி மீது ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
மேலும் படிக்க: சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை.. முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு.. என்ன மேட்டர்?
பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கும் மோதல்:
இந்த நிலையில், ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தனியாக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், ராமதாஸ் தரப்பிலும் அன்புமணி ஆதரவாளர்களை நீக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், 2025 ஆகஸ்ட் மாதம் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தினர்.
அப்போது அன்புமணி தரப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக ராமதாஸ் தொடருவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க: பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்… நெல்லையில் பரபரப்பு… அதிர்ச்சி காரணம்
மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பொறுப்பு:
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில், முதல் முறையாக அவரது மகள் ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். அப்போது முதலே, ஸ்ரீகாந்திக்கு கட்சியில் நிச்சயமாக பொறுப்பு வழங்கப்படும் என யூகங்கள் வெளியானது. இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு ஸ்ரீகாந்திக்கு பாமக நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “குடும்பப் பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது” என கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது ஸ்ரீகாந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.