அன்புமணிக்கு கொடுத்த கெடு.. கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கும் ராமதாஸ்?
PMK Ramadoss: அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் 10, 2025க்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணி பதில் அளிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தைலாப்புரம், செப்டம்பர் 11, 2025: 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும், 2025 செப்டம்பர் 10ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட அவகாசம் முடிந்துள்ள நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் நடவடிக்கை எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. மகள் வழி பேரனுக்கு பதவி வழங்கப்பட்டதிலிருந்து கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக தரப்பில் இருவரும் தனித்தனியாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராம்தாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே இருக்கும் மோதல்:
குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸுக்கு தனியாக நாற்காலி ஒதுக்கப்பட்டது. ஆனால் ராமதாஸும், அவரது ஆதரவாளர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதில், தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க: கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..
அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகள்:
இதேவேளை, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதில், “கட்சிக்கு எதிராக செயல்படுவது, கட்சி நிறுவனர் ராமதாஸை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வது, கட்சியை பிரிக்கும் நோக்கில் செயல்படுவது” உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் அடங்கின.
அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவராக ராமதாஸ் தொடர்வார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க முதலில் செப்டம்பர் 3, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மேலும் படிக்க: கூட்டணியில் சலசலப்பு.. திடீரென டெல்லி விரையும் நயினார் நாகேந்திரன்.. முக்கிய தலைவர்களுடன் மீட்டிங்!
அன்புமணி மீது நடவடிக்கை?
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 4, 2025 அன்று தைலாபுரத்தில் பாமக மாநில நிர்வாகக் குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர், அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் 10, 2025க்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கும் அன்புமணி பதில் அளிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்திருந்தார். இந்நிலையில், அவகாசம் முடிவடைந்துள்ளதால், அன்புமணி மீது கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.