கிராமங்களை நோக்கி.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராமதாஸ்..
Ramadoss Campaign: அன்புமணி தரப்பில் "100 நாள் நடைபயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். அன்புமணி தரப்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸும் "கிராமங்களை நோக்கி" என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கினார்.

செங்கல்பட்டு, செப்டம்பர் 11, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சி நிறுவனர் ராமதாஸும் செப்டம்பர் 10, 2025 முதல் “கிராமங்களை நோக்கி” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பாமகவை பொறுத்தவரையில், மகன் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. அப்போது நிறுவனர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை பாமக இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதனால் மேடையிலேயே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே மோதல் நிலவி வருகிறது.
இரண்டாக செயல்படும் பாமக:
இதன் காரணமாக கட்சியின் செயல்பாடுகளை இருவரும் தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி மாமல்லபுரத்தில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம், ராமதாஸ் தைலாபுரத்தில் தனது ஆதரவாளர்களை வைத்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மன நலத்துடன் இருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
இது ஒரு பக்கம் இருக்க, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அவரது தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. இதேபோல், 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், “கட்சியின் தலைவராக நானே இருப்பேன்” என ராமதாஸ் அறிவித்தார். மேலும் அந்த கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: 2 நாள் விடுமுறை… போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
கிராமாங்களை நோக்கி – ராமதாஸ் சுற்றுப்பயணம்:
இந்த சூழ்நிலையில், 2025 ஜூலை மாதம் அன்புமணி தரப்பில் “100 நாள் நடைபயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அன்புமணி தரப்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸும் “கிராமங்களை நோக்கி” என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் தொடங்கினார். இந்த கூட்டத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
போதையில்லா தமிழகம்:
அப்போது பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ், “டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தைக் கொண்டுதான் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையும் அந்த வருமானத்தில் இருந்து தான் வழங்கப்படுகிறது. குடியால் தனிமனிதன் மட்டுமல்ல; குடும்பம், நாடு ஆகிய அனைத்தும் அழிகிறது. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது. பெண்கள் மனம் வைத்தால் மட்டுமே போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும்” என்று கூறினார்.