எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மன நலத்துடன் இருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi Stalin: செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மனநலத்துடன் வாழ வேண்டும். அதிமுகவை வழிநடத்த அவருக்கு மட்டுமே தகுதியுள்ளது. அவர்தான் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, செப்டம்பர் 11, 2025: அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என்றும், அவருக்கு மட்டுமே அந்த தகுதி உள்ளதாகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 2026 தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் தேர்தல் வேலைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவில் உட்கட்சி விவகாரம் என்பது பூதாகரமாக வெடித்துள்ளது; கட்சியினர் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
தேர்தல் பரப்புரைகள்:
அதேபோல், திமுக தரப்பிலும், தமிழ்நாடு முதலமைச்சர் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து சாலைப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தனது தேர்தல் பயணத்தை செப்டம்பர் 9, 2025 அன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். மேலும், செப்டம்பர் 10, 2025 அன்று செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார்.
மேலும் படிக்க: திருச்சியில் விஜய் பிரசாரம் செய்ய 23 நிபந்தனைகள் விதிப்பு!
எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மன நலத்துடன் வாழ வேண்டும்:
அதில் பேசிய போது, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் மனநலத்துடன் வாழ வேண்டும். அதிமுகவை வழிநடத்த அவருக்கு மட்டுமே தகுதியுள்ளது. அவர்தான் நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும். இது தமிழ்நாடு மக்களுக்கு அவர்கள் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும். இதனால் எங்களுக்கு வேலைகள் சற்று சுலபமாக இருக்கும்,” என கிண்டல் செய்யும் தொணியில் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: வயிற்றெரிச்சல் மனிதர்கள்.. செங்கோட்டையன் மீது RB உதயகுமார் விமர்சனம்!
அதனைத் தொடர்ந்து, “எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போனது. தற்போது மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் போது திரும்பி வருகிற நிலையில், அவர் தனியாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. டிரைவர் கூட இருப்பாரா என தெரியவில்லை,” என நகைச்சுவையாக பேசினார்.
பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற முடியவில்லை:
மேலும், “அதிமுக கட்சி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் நிலையில் காப்பாற்றும் மருத்துவராக முதலமைச்சர் வருவார். எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற முடியவில்லை. அதிமுகவினர் அதை ஒப்புக்கொள்வார்களா என தெரியவில்லை. ஆனால், அவர் மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளராக இருக்க வேண்டும்; இதை நான் முன்மொழிகிறேன். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாடு மக்களுக்கு எடப்பாடி செய்யக்கூடிய ஒரே நல்ல காரியமும் அதுதான்,” என்று தெரிவித்தார்.