தூத்துக்குடியில் சோக சம்பவம்… பெண்ணுக்கு எமனாக மாறிய நாய்க்குட்டி..!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் நாய்க் குட்டியின் நக கீரல் பட்டதை சாதாரமாக எடுத்துக் கொண்ட பெண் ரேபிஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உறவினர்களுக்கும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ளது சில்லாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் முருகன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்க்குட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது, சுமதி அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த நாய்க் குட்டியின் நகம், சுமதியின் தோளில் பட்டு கீறல் ஏற்பட்டுள்ளது. நாய்க்குட்டிக்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், நகக்கீரலால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படாது என்று சுமதி சாதாரணமாக இருந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக சுமதிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
ரத்த மாதிரி பரிசோதனையில் ரேபிஸ் தொற்று உறுதி
ஒரு கட்டத்தில் சுமதிக்கு கடுமையான உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சுமதியின் ரத்தத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, அவரது ரத்தத்தில் ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமதியை தனி வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே, சுமதி தண்ணியை பார்த்து அஞ்சுவதும், நாய் செய்யும் செய்கை போல செய்வதும், வாயிலிருந்து எச்சில் வடிவதுமாக இருந்தது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்பு… ஜூலி மீது வழக்கு… பின்னணியில் நடந்தது என்ன!




சுமதியின் உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தல்
இதனால், சுமதிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால் இரு நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சுமதியின் உடல் அவரது கிராமமான சில்லாங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. சுமதி ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த காரணத்தால், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கொடிய நோயான ரேபிஸ் தொற்று பாதிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் ஆகும். அதே வேளையில் வளர்ப்பு பிராணிகளின் நகம் மற்றும் பல் ஆகியவை நமது உடல் பாகங்களில் ரத்த காயத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய சிகிச்சையை மேற்கொள்ளா விடில், ரத்தத்தில் தொற்று பரவி உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும் என்பதற்கு சுமதி உயிரிழப்பே சான்றாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: ரூ.8,000 கூப்பன் கேட்ட பெண்ணுக்கு ஆபாச அர்ச்சனை.. மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்த பெண்ணால் பரபரப்பு!!