பாமக யாருடன் கூட்டணி? பொதுக்குழு மேடையிலேயே சொன்ன அன்புமணி!
PMK Alliance : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பொதுக் குழு மேடையில் கூறியுள்ளார். அதாவது, 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் எனவும், ராமதாஸின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு, ஆகஸ்ட் 09 : 2026 சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் அன்புமணி (Anbumani Ramadoss) கூறியுள்ளார். மேலும், ராமதாஸ் விருப்பப்படியே கூட்டணி அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்புமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பொதுக் குழு கூட்டம் மேடையில் பாமக தலைவர் அன்புமணி பேசினார். பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார். குறிப்பாக, 2026 சட்டப்பேரவை தேர்தலின் கூட்டணி குறித்து அவர் பேசினார். அதாவது, “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி செய்து கொண்டிருக்கும், திமுக அரசை வெளியேற்றுவோம். நமக்கு இரண்டு இலக்குகள் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும்.
பாமக யாருடன் கூட்டணி?
யார் ஆட்சிக்கு வரக்கூடாது என இலக்கு இருக்கிறது. அதில் ஒரு இலக்கு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதைதான் நான் நடை பயணத்தில் தெரிவித்து வருகிறேன். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இன்னும் சிறிது காலத்தில் முடிவு செய்வோம். ஒரு மெகா கூட்டணியை அமைப்போம். உங்கள்(ராமதாஸ்) மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியும். அதன் விருப்பப்படி தான் அந்த கூட்டணி அமையும். மருத்துவர் அய்யா (ராமதாஸ்) அவர்களின் கனவை நிறைவேற்றவோம்” என கூறினார்.




Also Read : ராமதாஸ், அன்புமணிக்கு அழைப்பு விடுத்த நீதிபதி.. கட்சியின் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..
தொடர்ந்து பேசிய அவர், “நம் கட்சியின் வழிகாட்டி ஐயா அவர்கள்தான். நம்முடைய குலதெய்வம் ஐயா அவர்கள்தான். அவர் உடலளவில் இங்கு இல்லை என்றாலும், அவர் இங்குதான் இருக்கிறார். நான் பொறுப்புகள் மற்றும் பதவிகளுக்கு ஆசைப்படுபவன் கிடையாது. காலத்தின் கட்டாயத்திற்காக, உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக இங்கு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
”ராமதாஸ் தான் குலதெய்வம்”
இந்த இயக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது நோக்கம். அய்யா உடைய நாற்காலி நிரந்தரமான நாற்காலி, அவர் எப்போ வேண்டுமென்றாலும் இங்கு வரலாம் நிச்சயமாக இங்கு வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சில சமயங்களில் சாமிக்கு கோபம் அடைந்து விடும். அந்த சமயத்தில் சாமிக்கு திருவிழா எடுப்போம் அதன் பிறகு சாமி கோபம் குறையும். சாமிக்கு நாம் வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பூஜாரி தான் இங்கு பிரச்சனை. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சூழல் இருந்தால் நான் யோசித்து இருக்க மாட்டேன்.
பதவி வேண்டுமென்றால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு பதவி பெற்றிருப்பேன். ஆனால் அது என்னுடைய நோக்கம் அல்ல. இந்த சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இன்று மருத்துவர் அய்யாவை சுற்றி இருக்கின்ற, ஒரு சில சுயநலவாதிகள், குள்ளநரி கூட்டங்களா தீய சக்திகளா? இந்த நிலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
Also Read : பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார் – ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
நான் தூங்கி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனால் அமைதியாக இருக்கிறேன். தினம் ஏதாவது ஒரு செய்தி நம்மைப் பற்றி வந்து கொண்டே இருக்கிறது. பலரின் உழைப்பால் உருவாகிய கட்சி இது. ஒரு சிலர் சுயநலத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என இதுபோன்ற செய்தால் அதற்காக நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்” என தெரிவித்தார்.