அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..
Ramadoss Petition Against Anbumani: வருகின்ற 2025, ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவு வருகிறது. இந்த நிலையில் வரக்கூடிய 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது அதேபோல் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மற்றும் மகன் தனித்தனியே கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாமக உட்கட்சி விவகாரம்:
பாமகவில் உட்கட்சி விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. மகன் அன்புமணிக்கு எதிராக கட்சி நிறுவனர் ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் அமரும் இருக்கைக்கு அருகில் ஒட்டுக்கேட்கும் கருவி மகன் அன்புமணி வைத்ததாகவும் தந்தையை மிஞ்சிய மகன் எனவும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல தனது தைலாபுரம் இல்லத்தில் இருக்கக்கூடிய தொலைபேசியை வை – ஃபை மூலம் ஹேக் செய்ததாகவும் குறிப்பிட்டு டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் செயல் தலைவர் ஆக செயல்படுவார் எனவும் அறிவித்தார். அதோடு கட்சியின் தலைவராக நான் தான் இருப்பேன் எனவும் அறிவித்திருந்தார். பொதுக்குழு மூலம் உரிய விதிகளின் படி தேர்வு செய்யப்பட்ட எண்ணெய் யாரும் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாத என அன்புமணி தெரிவித்திருந்தார்.
9ஆம் தேதி அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்:
இந்நிலையில் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பை சேர்ந்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
அந்த மனுவில், “ கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் என்பது 2025 மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 2025 மே 30ஆம் தேதியிலிருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மனு:
2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் இடைய குழப்பத்தை ஏற்படுத்தவே நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படக்கூடும் எனவும் பொறுப்பில் இல்லாத நபர்கள் விதிகளின்படி கட்சி பொதுக்குழுவை கூட்டு அதிகாரம் இல்லை எனவே பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது