பா.ம.கவிற்கு மாம்பழச் சின்னம்.. அன்புமணிக்கு வந்த அறிவிப்பு – வழக்கறிஞர் கே.பாலு சொன்னது என்ன?
PMK Mango Symbol: பாமகவில் உட்கட்சி விவகாரம் தீராத நிலையில் தந்தை மகன் இடையே இருக்கும் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்புமணிக்கு வந்துள்ளதாக வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்

சென்னை, ஆகஸ்ட் 3, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் உட்க்கட்சி விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் பாமகவிற்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்புமணிக்கு வந்துள்ளதாக வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகாரப்போட்டி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. ஆகஸ்ட் 1, 2025 ஆம் தேதி ஆன நேற்று முன்தினம் அன்புமணி ராமதாஸ் தரப்பில் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஆகஸ்ட் 17, 2025 அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இரண்டு பேருமே தனித்தனியாக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பொதுக்குழு கூட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி:
இப்படியான சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் தான் அமரும் இருக்கைக்கு அருகில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும் விலை உயர்ந்த இந்த கருவி லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தனியார் உளவு நிறுவனம் சேர்ந்த அதிகாரிகள் தைலாபுரம் இல்லத்திற்கு சென்று அந்த ஒட்டு கேட்கும் கருவியை எடுத்து சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 2,2025 தேதியான நேற்று இந்த ஒட்டு கேட்கும் கருவி அன்புமணி தான் வைத்துள்ளதாகவும் தந்தையை மிஞ்சிய மகன் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.




Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு பறந்த கார்.. நலம் விசாரிக்க நாடிய கமல்ஹாசன்!
அன்புமணிக்கு கட்சியின் அதிகாரம்?
தந்தை மற்றும் மகன் இடையே இருக்கக்கூடிய மோதல்கள் அரசியலில் பெரும் பேசுப் பொருளாக மாறி இருக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் அன்புமணி நடத்தும் அலுவலக முகவரியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த சூழலில் தற்போது அன்புமணிக்கு கூடுதலாக கட்சியின் அங்கீகாரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு 8வது முறையாக முதலிடம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..
அதாவது பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழச்சின்னம் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்புமணி ராமதாஸுக்கு வந்துள்ளதாக பாமக வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார். அதே சமயம் ஒட்டுக்கேட்கும் கருவி விவகாரத்தில் ராமதாஸ் மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்றும் அன்புமணி தான் பாமக தலைவராக தொடர்கிறார். அவரது பதிவுகாலம் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அப்படியே பதவி காலம் முடிந்தாலும் அடுத்த தலைவரை பொதுக்குழுதான் தேர்வு செய்யும் எனவும் திட்டவட்டமாக அவர் குறிப்பிட்டுள்ளார்