பாமகவில் உச்சக்கட்ட குழப்பம்.. அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம்.. ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்..
PMK Ramadoss vs Anbumani: பாட்டாளி மக்கள் கட்சியில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. வருகின்ற 2025, ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17, 2025 அன்று ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 2,2025: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப்போட்டி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் பிற கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாமகவில் இன்னும் கட்சியின் தலைவர் பொறுப்பு அதிகார பொறுப்பு யாருக்கு என்று தந்தை மகன் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சிறப்பு பொதுக்குழு கூட்டம்:
மேலும் இருவரும் தனித்தனியாக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு உறுப்பினர்களை நீக்குவதும் சேர்ப்பதுமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் முகவரி அன்புமணியின் அலுவலக முகவரி இடம்பெற்று இருந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில் வரும் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: ஓபிஎஸ் அணியை சமாதானம் செய்ய முயற்சி? – நயினார் நாகேந்திரன் பதில்!
அன்புமணி தரப்பில் நடக்கும் பொதுக்குழு கூட்டம்:
கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெறும் என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச் செயலாளர் ராவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரி முதல் செங்கல்பட்டு வரை… எடப்பாடி பழனிசாமியின் 3 ஆம் கட்ட பயண விவரம்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவில் பாமகவின் இளைஞரணி செயலாளராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு கட்சித் தலைவர் அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து தான் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல்கள் தொடங்கியது. இந்த நிலையில் சிறப்பு பொதுக் குழு மற்றும் பொதுக்குழு 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.