தீராத மோதல்.. அன்புமணியின் நடைப்பயணத்திற்கு எதிர்ப்பு.. மீண்டும் மனு அளித்த ராமதாஸ்..
Ramadoss Petition Against Anbumani: அன்புமணி தரப்பில் நடைபயணம் செல்லும் என்று தொடர்ந்து நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ராமதாஸ் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதி பெறாமல் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை, ஜூலை 29, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகார போட்டி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. பல மாதங்களாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியின் செயல்பாடுகளையும் இருவரும் தனித்தனியாகவே மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியை விமர்சித்தே அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் கட்சி நிறுவனர் ராமதாசை பொறுத்தவரையில் கூட்டணி என்றால் அது திமுக அல்லது அதிமுகவுடன் தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அன்புமணியை பொறுத்தவரையில் ஏற்கனவே கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணியின் நடைப்பயணம்:
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி தரப்பில் 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களின் உரிமைகளை மீட்பதற்காக இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தார். அதேபோல் கட்சி நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25, 2025 அன்று சென்னையில் திருப்போரூரில் இந்த நடைபயணமானது தொடங்கியது. இந்த நடைபயணம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபி இடம் மனு அளிக்கப்பட்டது .
நடைப்பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது – நிறுவனர் ராமதாஸ்:
அதாவது அன்புமணி கட்சி கொடியையோ கட்சி பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த நடைபயணம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் இந்த நடைபயணத்தை அனுமதிக்க கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அன்புமணி தரப்பில் இந்த நடைபயணம் செல்லும் என்றும் தொடர்ந்து நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ராமதாஸ் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மோடியின் வருகை அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.. மதிமுக வைகோ பேட்டி..!
உள்துறை செயலாளரிடம் மனு:
அதாவது அனுமதி பெறாமல் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்துறை செயலாளரிடம் மனு அளித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற தனது தாயாரை சந்தித்து வந்தார். அதனை தொடர்ந்து கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த பிரச்சனை விரைவில் சரியாகும் என்றும் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு என்பது தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு கிடையாது, யாராவது தலையிட்டு என்ன என்று கேட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: பாஜக – திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.. தவெக தலைவர் விஜய் கண்டனம்!
அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய மோதல் சுமூகமாக முடியும் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆனால் அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு என்பதை நாளுக்கு நாள் அதிகரித்த தான் வருகிறது. அந்த வகையில் அன்புமணி தரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்சி செயல்பாடுகளையும் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த புகார்களுக்கும், மனு அளித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.