PMK Wiretapping scandal: தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி.. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!
PMK Ramadoss's Wiretapping Allegation: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி அதிகாரம் குறித்த கடும் மோதல் வெடித்துள்ளது. ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாகவும், அன்புமணிதான் அதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணி ராமதாஸூக்கும் (Anbumani Ramadoss) இடையே உட்கட்சி விவகாரம் மிகப்பெரிய அளவில் தலைதூக்கி வருகிறது. கட்சியை தொடங்கிய எனக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று டாக்டர் ராமதாஸூம் (Ramadoss), இந்திய தேர்தல் ஆணையம் தனக்குதான் அதிகாரம் கொடுத்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸும் கூறி வருகிறார். அதுமட்டுமின்றி பாமக தொண்டர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க பொதுக்குழுவையும், செயற்குழுவையும் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் ராமதாஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சைபர் கிரைம் காவல்துறையினரும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒட்டுகேட்பு கருவி குறித்த விளக்கமளித்த ராமதாஸ்:
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 3ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையையே வேவு பார்த்த மகன் அன்புமணி மட்டும்தான். நான் அமரும் சேருக்கு அருகே பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். எதற்காக வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனியார் விசாரணை குழு ஒன்றையும் நானும் தனியாக அமைத்துள்ளேன். இந்த குழு காவல்துறையினருக்கும், சைபர் கிரைம் காவல்துறையினரும் உதவியாக செயல்படுவார்கள்.” என்றார்.
ALSO READ: மதிமுகவில் முற்றிய உட்கட்சி விவகாரம்.. சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருக்கும் மல்லை சத்யா..
நிறுவனரும் நானே, தலைவரும் நானே – ராமதாஸ்:
பாமக அதிகாரம் குறித்து பேசிய ராமதாஸ், “அண்மையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு செயலாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆலோசனை நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொண்ட அன்புமணி கூட்டத்தில் பங்கேற்க கூடாது என என்னை மிரட்டினார். அதன்படி, பாமக கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தேன். பாமக கட்சியின் நிறுவனரும், தலைவருமான நான் கூறுவதை அவர் எப்படி தடுக்க முடியும். வருகின்ற 2025 ஆகஸ்ட் 10ம் தேதி பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய வகையில் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 2 முதல் 3 லட்சம் பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். அன்புமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம்” என்றார்.