ராமதாஸ், அன்புமணிக்கு அழைப்பு விடுத்த நீதிபதி.. கட்சியின் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..
Judge Anand Venkatesh: அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 8, 2025: ராமதாஸ், அன்புமணி நேரில் சந்திக்க நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேருமே தனித்தனியாக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கலந்து கொள்வதில்லை. அதே போல் ராமதாஸ் நடத்தும் கூட்டத்தில் அன்புமணிகோ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படுவதில்லை. இது போன்ற சூழலில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் பாமக கட்சியில் உட்கட்சி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.
அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மனு:
இந்த சூழலில் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘வெறும் விளம்பரம் தான்’ மாநில கல்விக் கொள்கையை விமர்சித்த அண்ணாமலை
இந்த மனுவில் 2025 மே 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதாகவும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2025 மே மாதம் 30ஆம் தேதியிலிருந்து தலைவராக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழு அவசர பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்ட நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் அணிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டம் கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தவே நடத்தப்படுவதாகவும் இந்த பொதுக்குழு கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி அழைப்பு:
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருடன் தனியாக பேச வேண்டிய உள்ளதால் இருவரும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா என வழக்கறிஞர்களிடம் கேட்டு அறிந்தார்.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண்.. நயினார் நாகேந்திரனுக்கு ரெடியான பிரச்சார வாகனம்..
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதனை ஏற்றுக் கொண்டார். ராமதாஸ் தரப்பில் தற்போது வரை பதில் அளிக்கப்படவில்லை இதை அடுத்து மாலை 5.30 மணிக்கு தன் அறைக்கு வரும்படி ராமதாஸ் அன்புமணி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது கட்சியினர் ஆதரவாளர்கள் வழக்கறிஞர்கள் யாரும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கட்சியின் நலன் கருதி இந்த சந்திப்பை நடத்தப் போவதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.