பதவி ஆசையா?.. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்?.. திருமாவளவன் பரபர விளக்கம்!!
Thirumavalavan Explanation: தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவைத் தடுக்கும் வலிமையோ, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்தும் வலிமையோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டில் தலையிடும் அதிகாரமோ எனக்கு இல்லை.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள விளக்கமும், அதனை ஒட்டிய அரசியல் விமர்சனங்களும் பேசுபொருளாக மாறியுள்ளன. புதிய அமைச்சரவையில் விசிக இடம் பெற்றது குறித்து விளக்கமளித்த திருமாவளவன், “கூட்டணி கட்சிகள் எடுக்கின்ற தனிப்பட்ட முடிவுகளைத் தடுப்பதற்கான வலிமை தன்னிடம் இல்லை என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் கூட்டணியைக் காப்பாற்றும் அளவுக்குத் தனிப்பட்ட அதிகாரம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் எங்களது தார்மீக உரிமை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க: மெரினா கடலில் மூழ்கி பள்ளி மாணவன் மாயம்..”விஜய் அண்ணனிடம் சொல்லுங்கப்பா”.. கண்ணீருடன் பரிதவிக்கும் தாய்!!
துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயற்சி:
தன் மீதான அவதூறுகளுக்கு வீடியோ மூலம் விளக்கமளித்துள்ள தொல்.திருமாவளவன், “தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் என்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சிதறடிப்பதற்குப் பல முனைகளில் இருந்தும் பல்வேறு தரப்பினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அதற்கு நான் கிஞ்சித்தும் இணங்காமல் உறுதியாக நின்றேன். கூட்டணியைப் பலவீனப்படுத்த ஒருபோதும் நான் இடம் தரவில்லை என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டினேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியைக் காப்பாற்றும் வலிமை இல்லை:
மேலும், இரண்டு ஆண்டுகளாகத் தன்னை மட்டுமே குறிவைத்துச் சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறுகளைப் பரப்பி, உணர்ச்சிகளைத் தூண்டி ஆத்திரம் ஊட்ட முயன்ற சாதிய, மதவாத சக்திகளின் சதித் திட்டங்கள் அனைத்தையும் தான் முறியடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு திமுக தலைவருக்கு என்னால் உறுதுணையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் உறுதுணையாக இருந்தேன். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அளவுக்கோ அல்லது காப்பாற்றும் அளவுக்கோ எனக்கு ஆளுமையோ, முகாந்தரமோ இல்லை. நான் இந்தக் கூட்டணியின் தலைவர் அல்ல” எனக் கூறியுள்ளார்.
என் மீது அவதூறு பரப்புவது ஏன்?
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவைத் தடுக்கும் வலிமையோ, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்தும் வலிமையோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டில் தலையிடும் அதிகாரமோ எனக்கு இல்லை. அப்படியிருக்க, சமூக ஊடகங்களில் விவாதிப்பவர்கள் மீண்டும் மீண்டும் என்னை மட்டுமே குறிவைத்து அவதூறுகளை ஏவுவது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை” எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை:
விசிக அவசரப்பட்டு தவெகவிற்கு ஆதரவு வழங்கிவிடவில்லை என்று மறுத்துள்ள திருமாவளவன், கட்சியின் உயர்மட்டக் குழுவில் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விவாதித்து, ஜனநாயக முறைப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். “நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை. அவர்களுக்கு ஆதரவு நல்குவதும், நல்காமல் போவதும் எங்களுக்கான சுதந்திரம், எங்களுக்கான உரிமை. எங்களின் இந்த முடிவைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவரிடத்திலே நேரில் விளக்கிச் சொல்லி, அவருடைய வாழ்த்துக்களோடும், இசைவோடும்தான் தவெக-விற்கான இந்த ஆதரவை நாங்கள் அறிவித்திருக்கிறோம்.”
இதையும் படிக்க: “12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!
மேலும், முடிவை அறிவிக்கத் தான் எவ்வித தாமதமும் செய்யவில்லை என்றும், இடதுசாரிகள் தங்களது முடிவை அறிவித்த அடுத்த நாளே விசிக-வின் ஆதரவுக் கடிதத்தை முறைப்படி தவெக தரப்பிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், ஊடகவியலாளர்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவே தலைமையகத்தில் நேரில் வந்து இந்த விபரங்களை வெளியிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.