சென்னையில் தொடர் மின்வெட்டு ஏன்? 3 முக்கியக் காரணங்களை வெளியிட்டது மின்வாரியம்!
மின் கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் தான் சில பகுதிகளில் மின்தடை நீண்ட நேரம் நீடிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 13: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இந்த மின்தடைக்கான முக்கியக் காரணங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. மின்வாரியம் நடத்திய ஆய்வின்படி, சென்னையில் குறிப்பாக மவுண்ட் ரோடு, வேளச்சேரி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் மற்ற இடங்களை விடக் கூடுதலான அளவில் மின்வெட்டுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!
மின்வெட்டுக்கு 3 முக்கியக் காரணங்கள்:
சென்னையின் பல பகுதிகளில் தற்போது பல்வேறு துறைகள் சார்பில் சாலைகளைத் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சாலைகளைத் தோண்டும்போது, பூமிக்கு அடியில் செல்லும் மின்வாரியத்தின் நிலத்தடி மின் கேபிள்கள் எதிர்பாராதவிதமாகச் சேதமடைகின்றன. இதுவே நகரின் பல இடங்களில் திடீர் மின்தடை ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
மின்மாற்றிகளுக்கு கூடுதல் சுமை:
சென்னையில் நடப்பு கோடைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குக் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகரின் உச்சபட்ச மின் தேவையானது 5,014 மெகாவாட்டைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் காரணமாக, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டுத் தொழில்நுட்பக் கோளாறுகள் உருவாகின்றன.
தொழிலாளர்கள் பற்றாக்குறை:
மின் கேபிள்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் மின்வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. பழுதுபார்க்கும் பணிகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும், இதனால் தான் சில பகுதிகளில் மின்தடை நீண்ட நேரம் நீடிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நிலவும் மின்தடைப் பிரச்சனையை விரைந்து சரிசெய்து, தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்கான சீரமைப்புப் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்வெட்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்சமயம் மின்வெட்டுப் பிரச்சனை ஒரு கடுமையான விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நிலவும் மிக மோசமான மின்வெட்டு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்
கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “இங்கு இவ்வளவு மோசமான முறையில் மின்வெட்டு இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நேற்றைய இரவு முழுவதும் மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகிறது என்றே தெரியவில்லை.
இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!
திடீரென வருகிறது, ஆனால் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி, படாத பாடுபட்டுள்ளனர்” என்று தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.