AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தவெக-வின் தாக்கத்தைக் கணிக்கத் தவறிவிட்டோம்”.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட இபிஎஸ்.. பரபர பின்னணி!!

கட்சியின் நிலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக நோக்கிச் செல்லும் இளைஞர் வாக்குகளைத் தடுக்க, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகத் தீவிரப்படுத்தி, புதிய இளைஞர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

“தவெக-வின் தாக்கத்தைக் கணிக்கத் தவறிவிட்டோம்”.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட இபிஎஸ்.. பரபர பின்னணி!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Jul 2026 06:21 AM IST

சென்னை, ஜூலை 04: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தாக்கத்தை நாங்கள் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நேற்று செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலி.. தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. சிறப்பம்சங்கள் என்ன?

தவெக-வின் எழுச்சியும் இபிஎஸ்-ஸின் கணிப்பும்:

அதன்படி, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தற்போதைய பலவீனங்கள் மற்றும் எதிர்கால உத்திகள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் வழக்கம்போல திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால், களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் நாம் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டோம். சினிமா மோகம் காரணமாக இளைஞர்களும், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களைத் தவெக-விற்கு வாக்களிக்கத் தூண்டி, வாக்குகளைத் திருப்பிவிட்டார்கள்.”

கட்சித் தாவல்களும் தற்போதைய பரபரப்பும்:

அதிமுகவின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தவெக-வில் இணைந்து வருவது கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அண்மையில் பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் வளர்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். கட்சித் தாவல்கள் குறித்துப் பேசிய அவர், “கட்சியிலிருந்து சுயநலத்திற்காக விலகிச் செல்பவர்கள் செல்லட்டும், அதைப்பற்றிக் கவலையில்லை. உண்மையான தொண்டர்கள் இன்னும் நம்மோடுதான் பலமாக உள்ளார்கள்” என்று நிர்வாகிகளுக்கு தைரியம் ஊட்டினார்.

இடைத்தேர்தலில் வென்றே தீர வேண்டும்:

தமிழகத்தில் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், விராலிமலை உள்ளிட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்குள் இந்த இடைத்தேர்தல் தொகுதிகள் வருவதால், எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். “வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இப்போதிருந்தே களப்பணிகளைத் தொடங்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அதிமுக வகுத்துள்ள 4 முக்கிய உத்திகள்:

கட்சியின் நிலையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, தவெக நோக்கிச் செல்லும் இளைஞர் வாக்குகளைத் தடுக்க, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகத் தீவிரப்படுத்தி, புதிய இளைஞர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும்.

மேலும் படிக்க: “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!

இனி வரும் காலங்களில் மாவட்ட வாரியாக உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மத்தியில் கட்சியின் சாதனைகளைக் கொண்டு சேர்க்கத் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிகளவில் முக்கிய பங்களிப்பு மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படும். புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நிலவும் உள் கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us