AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூப்பர் எல் நினோ.. 2026-27ல் கடும் வறட்சி, பஞ்சம் தீவிர காலநிலை பாதிப்புகளுக்கு வாய்ப்பு – தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த எச்சரிக்கை..

1876 முதல் 1878 வரை ஏற்பட்ட சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வு உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய சூழலும் அதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் எல் நினோ.. 2026-27ல் கடும் வறட்சி, பஞ்சம் தீவிர காலநிலை பாதிப்புகளுக்கு வாய்ப்பு – தனியார் வானிலை ஆய்வாளர் கொடுத்த எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jul 2026 07:22 AM IST

ஜூலை 4, 2026: 2026-ஆம் ஆண்டு உலகளவில் வலுவான ‘சூப்பர் எல் நினோ’  உருவாகும் சூழல் நிலவி வருவதால், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் உலக நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிலான தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், பசிபிக் பெருங்கடலில் எல் நினோவுக்கான கடல் மற்றும் வளிமண்டல இணைப்பு (Ocean-Atmosphere Coupling) ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், வரும் வாரங்களில் அதன் தீவிரம் மேலும் அதிகரித்து, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் ‘சூப்பர் எல் நினோ’ நிலையை எட்டக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் எல் நினோவின் தாக்கம்:

மேலும், நவம்பர் மாதத்தில் இந்த நிகழ்வு உச்சத்தை எட்டி, இதற்கு முன் பதிவான வலுவான எல் நினோ நிகழ்வுகளின் சாதனைகளைக் கூட முறியடிக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மேற்கத்திய காற்றழுத்த வெடிப்பு காரணமாக பெரு மற்றும் ஈக்வடார் கடலோரப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது வலுவான எல் நினோ உருவாகும் முக்கிய அறிகுறியாக கருதப்படுவதாகவும், பசிபிக் பெருங்கடலில் எதிர்வரும் மேற்கத்திய காற்றழுத்த மாற்றங்களும் இந்த நிகழ்வை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. ஜூலை 9ஆம் தேதி வரை மழை நீடிக்கும்..

கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்படும் அபாயம்:

1876 முதல் 1878 வரை ஏற்பட்ட சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வு உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய சூழலும் அதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.

தற்போதே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் எல் நினோவின் ஆரம்பகட்ட தாக்கங்கள் தென்படத் தொடங்கியுள்ளன என்றும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பருவமழை சீர்குலைவு மற்றும் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான எல் நினோ காரணமாக சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, மற்ற சில பகுதிகளில் கடுமையான வறட்சி, வெப்ப அலை, ‘ஹீட் டோம்’  போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை:

எனினும், இது அச்சத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை அல்ல என்றும், முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அறிவுறுத்தல் என்றும் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வேளாண்மை, நீர்வள மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, குடிநீர் திட்டங்கள், சுகாதாரம், மின்சாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அரசுகள் உடனடியாக நீண்டகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக வானிலை அமைப்பு சொல்லும் தகவல்:

இதற்கிடையில், உலக வானிலை அமைப்பின் (WMO) மாதாந்திர உலகளாவிய பருவநிலை முன்னறிவிப்பு அறிக்கையிலும், 2026-ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வலுவான எல் நினோ நிகழ்வு வேகமாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி காலநிலை முன்னறிவிப்பு மையங்களின் பல்வேறு மாதிரிகளை ஒருங்கிணைத்த கணிப்புகளின்படி, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து, முக்கிய கண்காணிப்பு பகுதிகளில் பருவகால சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us