“தமிழக அரசியலின் மைய சக்தி ‘விசிக’ மட்டுமே!”.. தவெகவுடன் கூட்டணி? திருமாவளவன் கொடுத்த விளக்கம்!!
விசிக-வை நோக்கி இத்தகைய விமர்சனங்கள் குறிவைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை திருமாவளவன் அம்பலப்படுத்தினார். "தமிழகத்தில் எத்தகைய புதிய அரசியல் சக்திகள் உருவெடுத்தாலும், எப்படிப்பட்ட அரசியல் சூழல் மாறினாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் எப்போதும் அரசியலின் மையப்புள்ளியாக இருக்கிறது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை, ஜுன் 22: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் விவாதப் புள்ளிகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, தவெக-வுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்கப் போகிறதா? என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், நிலவி வரும் ஒட்டுமொத்த அரசியல் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தங்களின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
இதையும் படிக்க : முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி
கொள்கை அளவில் தவெக-வுடன் உடன்பாடு ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எத்தகைய கொள்கைகளை முன்வைத்து அரசியல் செய்கிறதோ, அதையே தான் விஜய்யும் கையில் எடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில், “நாங்கள் எதைக் கொள்கையாக உயர்த்திப் பிடிக்கிறோமோ – அண்ணல் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கிறோம், தந்தை பெரியாரை உயர்த்திப் பிடிக்கிறோம், நாங்கள் பேசுகிற சமூக அரசியல் மற்றும் சமூக நீதி அரசியலை நாங்களும் பேசுகிறோம் என்று தவெக தலைவர் விஜய் உறத்துச் சொல்கிறார். இதில் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கொள்கை ரீதியாக என்ன முரண்பாடு இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், கொள்கை ஒற்றுமை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்பதை உணர்த்தும் வகையில், “நாங்கள் தவெக-வுடன் இன்னும் எந்தவிதமான கூட்டணிப் பேச்சுகளையும் தொடங்கவில்லை” என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
“இது குழப்பம் அல்ல; அரசியல் நுட்பம்!”
தற்போதைய அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் குழம்பிப் போய் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “இது குழப்பம் இல்லை, இதுதான் அரசியல் நுட்பம்” என்றார். இந்த அரசியல் நுட்பத்தை விளங்கிக் கொள்ளாத காரணத்தால் தான் சிலர் தேவையில்லாமல் குழம்பிக் கொண்டு, தங்களையும் குழப்ப முயற்சிக்கிறார்கள் என்று சாடினார். கடந்த கால தேர்தல் மற்றும் ஆட்சி அமைக்கும் சூழல்களை உதாரணமாகக் காட்டிப் பேசிய அவர், “ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், ஆட்சி அமைக்க முடியாத ஒரு இக்கட்டான சூழல் இருந்தது.
உறுதியாக இருந்த மதச்சார்பற்ற சக்திகள்:
அப்போது வெறும் இரண்டே இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த இரண்டு இடங்களைக் கொடுத்தால் ஆட்சி அமைந்துவிடும், கொடுக்கவில்லை என்றால் மாற்று நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது” என்று விவரித்தார். மேலும், “அத்தகைய சூழலில் ஒன்று அதிமுக உடைய வேண்டும் அல்லது அதிமுகவின் ஆதரவைப் பெற வேண்டும், இல்லையென்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருக்கிற பாஜகவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலைப்பாடு தங்களுக்கு வேண்டாம் என்பதில் மதச்சார்பற்ற சக்திகள் உறுதியாக இருந்தன” என்றார்.
விசிக மீது பாயும் விமர்சனங்கள்:
“நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக எவ்வளவு இடங்களை, வாக்கு சதவீதத்தை இழந்திருக்கிறது? அதிமுக எவ்வளவு வாக்கு சதவீதத்தைப் பறிகொடுத்திருக்கிறது? பாஜக தனது 9% வாக்குகளை எங்கே பறிகொடுத்திருக்கிறது? நாம் தமிழர் கட்சி தங்களின் வாக்குகளை எவ்வாறு இழந்திருக்கிறார்கள்? இதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதில்லை. இந்த வாக்குச் சரிவுகளைப் பற்றி விவாதிக்காமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிக்க : “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!
தமிழக அரசியலின் மைய சக்தி ‘சிறுத்தைகள்’ மட்டுமே:
விசிக-வை நோக்கி இத்தகைய விமர்சனங்கள் குறிவைக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை திருமாவளவன் அம்பலப்படுத்தினார். “தமிழகத்தில் எத்தகைய புதிய அரசியல் சக்திகள் உருவெடுத்தாலும், எப்படிப்பட்ட அரசியல் சூழல் மாறினாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் எப்போதும் அரசியலின் மையப்புள்ளியாக இருக்கிறது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
எனவே தான், “எப்படியாவது சிறுத்தைகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் சிறுத்தைகளை மையப்படுத்தியே தமிழக அரசியல் இயங்கும்” என்று அவர் கூறினார்.