“விமர்சனங்களை நிறுத்துங்கள்.. கொள்கை ரீதியாக விவாதிக்க வாருங்கள்!”.. மேயர் பிரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!!
தவெக அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில் செய்துள்ள சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் 'ரீல்ஸ் ஆட்சி' என்ற விமர்சனத்திற்கும் அவர் புள்ளிவிவரங்களுடன் பதிலளித்தார். பள்ளிகள், கோவில்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. தகுதியுள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.
சிவகாசி, ஜுன் 22: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகாசியில் தவெக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக-வின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான கீர்த்தனா, திமுக அரசு மற்றும் சென்னை முன்னாள் மேயர் பிரியா ஆகியோர் தவெக அரசு மீது வைக்கும் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாரக மந்திரமான “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என்ற வாசகத்துடன் தனது உரையைத் தொடங்கினார்.
இதையும் படிக்க : தேர்தல் தோல்வி.. நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!!
சென்னை மேயர் பதவிக்கு அழகு இதுதானா?
பொதுமேடையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தவெக அரசு அமைந்த இந்த குறுகிய 30 நாட்களில் செய்த சாதனைகளை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் திருமண வீடுகளிலும், மேடைகளிலும் கதறி வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து முன்னாள் சென்னை மேயர் பிரியா குறித்துப் பேசிய அவர், “சென்னை மேயர் என்பது எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய பொறுப்பு. ஆனால், அந்தப் பொறுப்பில் இருந்தவர்கள் காரைப் பிடித்துக்கொண்டு தொங்கிச் சென்றதையும், மற்றொருவருக்குக் குடை பிடித்துக் கொண்டு சென்றதையும் தமிழகம் பார்த்தது. பவுடரா, மேக்கப்பா என்று தெரியாமலேயே எதையாவது பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் இன்று எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “இனிமேல் எங்களைப் பற்றி தனிநபர் விமர்சனம் செய்வதையோ அல்லது உருவக் கேலி செய்வதையோ நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் தைரியம் இருந்தால் கொள்கை ரீதியாக என்னுடன் விவாதிக்க நேருக்கு நேர் அமருங்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்,” என்று முன்னாள் மேயர் பிரியாவுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.
70 ஆண்டுகால ஏமாற்றமும், தவெக-வின் பெண் விடுதலையும்:
கடந்த கால ஆட்சிகளில் ‘பெண்கள் முன்னேற்றம்’ என்பது வெற்றுப் பேச்சாக மட்டுமே இருந்தது என்று சாடிய கீர்த்தனா, தவெக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாகத் தமிழக சட்டமன்றத்தின் செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் அழகு பார்க்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் பெண் கவுன்சிலர்கள் அல்லது பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களின் கணவன்மார்கள் தான் கையெழுத்திடுவார்கள், போன் எடுப்பார்கள். ஆனால் விஜய் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக-வின் முன்னாள் முதலமைச்சரை விமர்சித்த அவர், பெண்கள் முன்னேற்றம் என்று மேடையில் முழங்கிய நீங்கள், உங்கள் வீட்டுப் பெண்ணையே (தங்கச்சி) அதிகாரம் தராமல் டெல்லிக்கு அனுப்பி முடக்கினீர்கள். அங்குள்ள பெண்களுக்கு டார்ச்சர் கொடுத்தீர்கள். எனவே, பெண்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ, அங்கு வந்து இணையுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
30 நாட்களில் தவெக அரசின் இமாலய சாதனைகள்:
தவெக அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில் செய்துள்ள சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் ‘ரீல்ஸ் ஆட்சி’ என்ற விமர்சனத்திற்கும் அவர் புள்ளிவிவரங்களுடன் பதிலளித்தார். பள்ளிகள், கோவில்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. தகுதியுள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்குக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ உருவாக்கப்பட்டு, 2545 புதிய பெண் காவலர்கள் மற்றும் நவீன ட்ரோன்கள், ரோந்து வாகனங்கள் ₹354 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் ₹38,000 கோடி மதிப்பிலான ஹூண்டாய் கப்பல் திட்டம் மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “முஸ்லிம் லீக் முடிவையே மதிமுகவும் எடுக்கும்”.. யார் நண்பன், யார் பகைவன் என்பதை காட்டிய தேர்தல்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
ரீல்ஸ் மற்றும் தொழில் முதலீடுகள் குறித்த விளக்கம்:
தொழில்துறை முதலீடுகள் தொடர்பாகத் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் வெளியிட்ட இன்வெஸ்ட்மென்ட் வீடியோவைப் பார்த்துப் பலர் சமூக ஊடகங்களில் கேலி செய்தார்கள். ஆனால், கடந்த காலங்களில் மக்களின் வரிப் பணத்தில் சொகுசாக வெளிநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாகச் சென்று முதலீடு வாங்கித் தருவதாகக் கூறினார்களே, அப்போது அவர்களுக்கு இது தெரியவில்லையா? இன்று எங்கள் த.வெ.க ஆட்சியில் வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கிக் கொண்டுவரும் சூழலை உருவாக்கியிருக்கிறோம்” என்று விளக்கமளித்தார்.