“சிங்கப்பெண் படை எங்கே?”.. வண்டலூர் பள்ளி மாணவி விவகாரத்தில் கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்!!
Udhayanidhi Stalin Slams TN Govt: வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை மறைக்கப் போலீஸார் முயல்வதாகவும், பாதிக்கப்பட்ட பெற்றோரைக் அச்சுறுத்துவதாகவும் சாடியுள்ள அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, செப்.25: சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியொன்றில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவி, பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தபோதே மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கூடத்திற்குள் கல்வி பயிலச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வெட்கக்கேடான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தனது கொந்தளிப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க: வண்டலூர் அரசுப் பள்ளி கழிவறையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கொதித்தெழுந்த பெற்றோர்.. சாலையில் இறங்கி மறியல்!!
“சிங்கப்பெண் படை எங்கே?” சரமாரி கேள்வி:
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய…
— Udhay (@Udhaystalin) September 25, 2026
தனது எக்ஸ் பதிவில் மாநில அரசைக் கடுமையாகச் சாடியுள்ள உதயநிதி ஸ்டாலின், “பெண்கள் பாதுகாப்பில் ‘No compromise’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த சர்க்கஸ் ஆட்சியில், அரசுப் பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேடைகளில் “பெண்கள் பாதுகாப்பில் அண்ணனாக இருப்பேன், அரணாக இருப்பேன்” என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் தற்போது எங்கே போனார் என்றும், உரக்கப் பேசப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ எங்கே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விளம்பர அரசியல் செய்யும் இந்த ரீல்ஸ் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தையே அளிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு:
அரசியல் லாபங்களுக்காகவும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் இக்குற்றச் சம்பவம் மூடி மறைக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மதுராந்தகம் பகுதிக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகை தருவதைச் சுட்டிக்காட்டி, இந்த கொடூர சம்பவத்தைக் காவல் துறையினரும் அதிகாரிகளும் மூடி மறைக்க முயல்வதாகவும், இச்சம்பவத்தைப் ‘பாம்புக்கடி’ என்று கூறி மடைமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளைக் கைது செய்யத் துப்பில்லாத காவல் துறை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரின் செல்போன்களைப் பறிமுதல் செய்து, இச்சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக வெளிவரும் தகவல்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேலும் சித்திரவதை செய்வதாக உள்ளது என்றும் அவர் கண்டித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் இரவில் அலரல் சத்தம்.. நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மாணவர் உள்பட மூவரின் வக்கிர செயல்!
உரிய நீதியும், பாதுகாப்பும் கோரிக்கை:
இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக இத்தகைய கொடூரமான சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தால், வரவிருக்கும் தேர்தலில் பொதுமக்கள் இந்த ஆட்சியாளர்களின் முகத்தில் கரியைப் பூசுவது உறுதி என எச்சரித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இக்கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தாமதமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.