சாலையோரம் நின்ற லாரி.. அதிவேகமாக வந்த R15 பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து.. அடுத்து நிகழந்த சோகம்!
Dindigul Lorry Bike Accident: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பைக் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து விறகுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சமுத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே லாரி சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரியின் டயர் பஞ்சரானது. உடனே, அதன் ஓட்டுனர் லாரியை சாலையோரமாக நிறுத்தி பழுது பார்த்து வந்தார். அப்போது, நத்தம் அருகே உள்ள மூங்கில் பட்டியை சேர்ந்த சிற்பக் கலைஞரான சித்திரவேல் என்பவர் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சித்திரைவேல் மற்றும் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த நத்தம் பகுதி வேலாயுதம் பட்டியை சேர்ந்த லோடுமேன் பொன்னுக்காளை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்த நபர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இருக்க ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி முதலுதவி அளித்துவிட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: டூரிஸ்ட் கைடு, ஆசிரியர்… நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை ஏமாற்றிய தமிழர் – பரபரப்பு தகவல்




அடுத்தடுத்து பிரிந்த உயிர்கள்
அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களும் உடல் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அந்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் போலீசார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: பூஜ்ஜியமாக குறைந்த யானை உயிரிழப்பு விகிதம்.. மாற்றத்தை ஏற்படுத்திய ஏஐ கண்காணிப்பு மையம்.. குவியும் பாரட்டுகள்!