கல்லூரி மாணவிக்கு தொடர் லவ் டார்ச்சர்.. அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் படை.. தூத்துக்குடியில் சம்பவம்!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு சமையல் காரர் ஒருவர் காதல் தொல்லை அளித்த புகாரின் பேரில், அவரை சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் ( 31 வயது). இவர், சமையல் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு சமையல்காரர் சொக்கலிங்கம் கூறியுள்ளார். இதற்கு, அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும், அவரது எதிர்ப்பை மீறி சொக்கலிங்கம் தொடர்ந்து அந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து வந்தாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவியிடம் சமையல்காரர் சொக்கலிங்கம் ஆபாசமான சைகைகள் காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
சமையல்காரரை கைது செய்த சிங்கப் பெண்கள் படை
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் கட்டணம் இல்லா உதவி எண்ணான 1091- க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்ஸி தலைமையிலான மகளிர் போலீசார் செக்காரக்குடி கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, வீட்டில் இருந்த சமையல்காரர் சொக்கலிங்கத்தை அதிரடியாக கைது செய்து தூத்துக்குடி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க: தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தவெக கல்வி விருது விழா.. முதலமைச்சராக மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்..!!




போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
அவரிடம் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை அளித்ததையும், ஆபாசமான சைகைகள் புரிந்ததையும் சமையல்காரர் சொக்கலிங்கம் ஒத்துக் கொண்டார். இதை தொடர்ந்து, அவர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பகுதியில் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து வந்த சமையல்காரர் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில்…
தமிழகத்தின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடி படை பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அதிரடியாக கைது செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிராம பகுதியில் கல்லூரி மாணவிக்கு தொல்லை அளித்த நபரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “மருத்துவக் கனவில் இடி!”.. தமிழகத்தில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது.. கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம்!