அதிரடியாக உயரும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை.. வெளியாகப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு..!
டாஸ்மாக் கடைகள் மூலமாக நாளொன்றுக்குச் சராசரியாக சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் மற்றும் பீர்களின் விலையை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்த அண்மையில் நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாக வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 08: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கும், சில்லறை விற்பனையை முறைப்படுத்துவதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபானங்களின் சில்லறை விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்துவது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாக வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மதுபான ஆலைகள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான உற்பத்திக் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?
விலை உயர்வு முன்மொழிவுக்கான பின்னணி:
அதன்படி, ஒரு வழக்கமான பெட்டிக்கு வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூ.90, பீருக்கு ரூ.40 மற்றும் ஒயினுக்கு ரூ.20 என புதிய கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூடுதல் கட்டண உயர்வால் தங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி, மதுபான உற்பத்தியாளர்கள் சில்லறை விற்பனை விலையையும் உயர்த்துமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளை முதலமைச்சர் விஜய் அதிரடியாக மூட உத்தரவிட்டதால், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும் இந்த விலை உயர்வு முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது.
ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர வாய்ப்பு:
தமிழகம் முழுவதும் தற்போது மொத்தம் 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலமாக நாளொன்றுக்குச் சராசரியாக சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் மற்றும் பீர்களின் விலையை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்த அண்மையில் நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாக வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும், விலையை எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனியார்மயமாக்க நிதித்துறை எதிர்ப்பு:
டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், எதிர்காலத்தில் சில்லறை மதுபான விற்பனையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், விற்பனை உரிமையைத் தனியாருக்கு வழங்கினால் மாநில அரசின் மதுபான வருவாய் பெருமளவில் பாதிக்கப்படும் என்று நிதித்துறை தரப்பில் இதற்கு வலுவான ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்
ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது:
டாஸ்மாக் விலை உயர்வு குறித்த விவாதங்கள் ஒருபுறம் நீடிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே.விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை அறிவித்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.110.74 கோடி செலவாகும். இருப்பினும், “ஊழியர்களின் இந்த சம்பள உயர்வுக்காக மதுபானங்களின் சில்லறை விலை உயர்த்தப்படாது; சம்பள உயர்வுக்கும் விலை உயர்வுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை” என்று அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.