AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மருத்துவக் கனவில் இடி!”.. தமிழகத்தில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது.. கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம்!

அதேபோல, சாதாரண சுயநிதி தனியார் கல்லூரிகளில் தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு கல்வி கட்டணம் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே உள்ளது. ஆனால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அத்தகைய கட்டணக் கட்டுப்பாடுகள் ஏதும் அரசிடம் கிடையாது.

“மருத்துவக் கனவில் இடி!”.. தமிழகத்தில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது.. கட்டணமும் பல மடங்கு உயரும் அபாயம்!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Jul 2026 11:40 AM IST

சென்னை, ஜூலை 08: நடப்பு கல்வி ஆண்டில் தமிழக அரசு மருத்துவச் சேர்க்கையில் சுமார் 650 எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவக் கல்வி பயில விரும்பும் தமிழக மாணவர்களிடையேயும் அவர்தம் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளாக இயங்கி வந்த ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று முக்கியக் கல்லூரிகள் தற்போது ‘நிகர்நிலை பல்கலைக்கழக’ அந்தஸ்தைப் பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும். இந்த மூன்று கல்லூரிகளிலும் மொத்தமாக 650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?

இடங்கள் குறைய என்ன காரணம்?

இதுவரை இந்த சுயநிதி கல்லூரிகள், தங்களின் மொத்த இடங்களில் 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரையிலான இடங்களை மாநில அரசின் கீழ் இயங்கும் ‘தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு’ (மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு) வழங்கி வந்தன. தற்பொழுது இந்தக் கல்லூரிகளின் அந்தஸ்து முழுமையாக மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்குக் கிடைத்து வந்த 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பறிபோகும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

7.5% உள் ஒதுக்கீட்டிற்கும் பலத்த பாதிப்பு:

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசு வழங்கி வரும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கும் இந்த அந்தஸ்து மாற்றத்தால் நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று கல்லூரிகளின் மாற்றம் காரணமாக, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்களில் 25 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. இதுமட்டுமன்றி, மேலும் 3 சுயநிதி கல்லூரிகள் இதேபோன்று நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற மத்திய அரசிடம் அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஒருவேளை அவற்றுக்கும் அனுமதி கிடைத்தால், தமிழக அரசு இழக்கும் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 700-ஐத் தொடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அகில இந்திய அளவில் போட்டி:

இந்தக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால், அவற்றுக்கான மாணவர் சேர்க்கை இனி மாநில அரசின் கலந்தாய்வு வரம்பிற்குள் வராது. மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு மூலமாகவே அகில இந்திய அளவில் இதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். இதனால் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை குறைந்து, இந்தக் கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் போட்டி மிகக் கடுமையாக அதிகரிக்கும்.

கட்டணக் கட்டுப்பாடு இல்லை:

அதேபோல, சாதாரண சுயநிதி தனியார் கல்லூரிகளில் தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு கல்வி கட்டணம் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே உள்ளது. ஆனால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அத்தகைய கட்டணக் கட்டுப்பாடுகள் ஏதும் அரசிடம் கிடையாது. இதன் காரணமாக, இந்த மூன்று கல்லூரிகளிலும் ஆண்டு கட்டணம் 20 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பல மடங்கு அசுர வேகத்தில் உயரக்கூடும் என்று கல்வி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

இதையும் படிக்க: போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்

மத்திய அரசுக்குக் கடிதம் எழுத முடிவு:

மாநில அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கடுமையான ஆட்சேபனைகளையும் மீறி, இந்தக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும், தமிழக மாணவர்களின் மருத்துவ சேர்க்கை உரிமையையும் இடங்களையும் மீட்டெடுக்கும் நோக்கோடும், மத்திய அரசுக்கு உடனடியாகக் கடிதம் எழுதத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அரசு உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us