AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்? தேதி குறித்த அமைச்சர் வெங்கட்ரமணன்!

New Ration Cards in Two Weeks: சென்னை மயிலாப்பூரில் புதிய உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைத்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய ரேஷன் அட்டைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று வீண் வதந்திகளைப் பரப்பும் எதிர்க்கட்சிகளுக்குப் பொதுமக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய ரேஷன் கார்டு எப்போது வரும்? தேதி குறித்த அமைச்சர் வெங்கட்ரமணன்!
அமைச்சர் வெங்கட்ரமணன்
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 08 Jul 2026 12:50 PM IST

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் 126-வது வார்டு பகுதியில், மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினியின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு புதிய நவீன உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சி கூடத்தை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் முறைப்படி திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்கால சூழலில் பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு உடற்பயிற்சி சிறந்ததொரு உறுதுணையாக இருக்கும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து ரேஷன் கார்டுகள் குறித்துப் பேசிய அமைச்சர், பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) இன்னும் ஓரிரு வாரங்களில் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படவுள்ளன என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் அமைச்சரின் பதிலும்

தொடர்ந்து செய்தியாளர்கள், “தமிழகத்தில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகிறார்களே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து, மனசாட்சியுடன் செயல்படும் ஒரு சிறந்த மக்களாட்சியை நடத்தி வருகிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.

சாதி, மதம் அல்லது அரசியல் கட்சி என்ற எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல், அனைத்து தரப்பு மக்களுக்குமான பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. எனவே, ஆட்சி கவிழ்ப்பைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்பி வருபவர்களுக்குப் பொதுமக்களே தங்களின் செயல்கள் மூலம் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேயர் பங்கேற்காதது குறித்த விளக்கம்

இந்த உடற்பயிற்சி கூடத் திறப்பு விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் கலந்து கொள்ளாதது குறித்தும், அதனால் அவர்களுக்கிடையே ஏதேனும் மோதல் போக்கு நீடிக்கிறதா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், எங்களிடையே எந்தவிதமான பாரபட்சமும் அல்லது கருத்து வேறுபாடும் கிடையாது என்று மறுத்தார்.

கட்சி, பதவி என்ற எல்லைகளைத் தாண்டி நாங்கள் அனைவரும் மக்கள் பணிக்காக ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருகிறோம். இந்த விழாவிற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது, இருப்பினும் ஒரு சிலர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது தவிர்க்க முடியாத பணிகளுக்காகவோ வராமல் இருந்திருக்கலாம். அதைப் பற்றி நாம் பெரிதாகக் கருத்து கூற முடியாது என்று அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also Read: நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்

முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்கும் முயற்சி

இறுதியாக, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தமிழக முதலமைச்சரின் சுறுசுறுப்பான செயல்பாடுகளையும், அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் எப்படியாவது முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே சிலர் திட்டமிட்டு இத்தகைய புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள் என்று சாடினார்.

முதலமைச்சர் திருச்சிக்குச் செல்லக்கூடாது என்று கூட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை முழுமையாக நிராகரித்துவிட்டது. தமிழக அரசு எடுத்து வரும் நல்ல முன்னெடுப்புகளையும், மக்களுக்குச் செய்து வரும் அர்ப்பணிப்பான சேவைகளையும் சகித்துக் கொள்ள முடியாத சில சுயநலவாதிகள், இல்லாத குறைகளைக் கற்பனையாகப் புனைந்து கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.

Follow Us