AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனியார் பள்ளிக் கட்டணம் எவ்வளவு?.. அறிவிப்புப் பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களைத் தங்களது அறிவிப்புப் பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிக் கட்டணம் எவ்வளவு?.. அறிவிப்புப் பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!
மாதிரிப் புகைப்படம் (AI)
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Jul 2026 12:52 PM IST

சென்னை, ஜூலை 08: தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களைப் பள்ளியின் நுழைவாயில் அல்லது அறிவிப்புப் பலகைகளில் (Notice Board) பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விவரங்களில் முழு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?

வழக்கின் பின்னணி என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ (CBSE) மற்றும் பிற கல்வி வாரியப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள முறையான கல்விக் கட்டணங்களை விளம்பரப் பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என மாநிலத் தகவல் ஆணையம் கடந்த மே 25-ஆம் தேதி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

மாநிலத் தகவல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர், அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்று ஒரு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பள்ளிகளுக்குப் பிறப்பித்தார்.

தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கு:

மாநிலத் தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கும், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தின் சுற்றறிக்கைக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அகিলা இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (AIPSEI) பொதுச்செயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தனியார் பள்ளிகளின் நிர்வாகச் சுதந்திரத்தில் இது தலையிடுவது போலாகும் என்பதால், இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:

இந்த மனுவை விரிவாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, தனியார் பள்ளிகளுக்குக் கடிவாளம் போடும் வகையிலான அதிரடித் தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில், “தனியார் பள்ளிகள் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் நேரடியாக வராது என்ற போதிலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி கட்டண நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்” என்று சுட்டிக்காட்டினார். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கும் முன்பே பள்ளியின் கட்டணத்தை அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என்றும் கருதப்பட்டது.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுக்கு அரசு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களைத் தங்களது அறிவிப்பு மற்றும் விளம்பரப் பலகைகளில் கட்டாயம் பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்

பெற்றோர்கள் மத்தியில் நிம்மதி:

ஆண்டுதோறும் கல்வி ஆண்டு தொடங்கும் போது தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு கூடுதல் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் என்றும், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் என்றும் கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow Us