அதிமுகவில் வெடித்த அடுத்த புயல்.. இபிஎஸ்-க்கு டிமிக்கி கொடுத்த முக்கிய புள்ளிகள்.. பின்னணியில் வேலுமணி?
தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களிடையே மறைமுக மோதல் வலுத்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, சென்னையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியின் சீனியர் நிர்வாகிகள் புறக்கணித்துள்ளது கட்சி வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னை, ஜூலை 08: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற முக்கிய மாவட்ட வாரியான ஆலோசனைக் கூட்டத்தைத் திருச்சியின் முக்கிய முன்னாள் நிர்வாகிகள் அதிரடியாகப் புறக்கணித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!
தோல்வி குறித்து தீவிர ஆலோசனை:
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஐந்து நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, தேர்தல் கள நிலவரங்கள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றைய சந்திப்பில் பங்கேற்கத் தலைமை கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலையில் நடைபெற்ற திருச்சி மாநகர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளின் கூட்டத்தில், இபிஎஸ் தரப்பால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உத்வேகத்துடன் கலந்துகொண்டனர்.
முக்கிய மாஜிக்கள் புறக்கணிப்பு – பின்னணியில் வேலுமணி?
புதிய நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்திற்கு வந்திருந்த வேளையில், நீண்ட காலமாகத் திருச்சியில் அதிமுகவின் முகமாக இருந்த முன்னாள் மாவட்ட செயலாளர்களான பா.மா.குமார் மற்றும் பரஞ்ஜோதி ஆகிய இரு முக்கிய புள்ளிகள் இக்கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தரப்பு மற்றொரு அணியாகவும் மறைமுகமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதில் திருச்சி மாஜிக்களான பா.மா.குமார் மற்றும் பரஞ்ஜோதி ஆகிய இருவரும் வேலுமணி தரப்புக்குத் தீவிர ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, எடப்பாடி பழனிச்சாமி இவர்களது மாவட்டச் செயலாளர் பதவிகளை அண்மையில் அதிரடியாகப் பறித்து, புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார்.
வேட்பாளர் அதிருப்தி:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பா. மா. குமார் கடுமையான தோல்வியைத் தழுவியிருந்தார். மற்றொரு மூத்த தலைவரான பரஞ்ஜோதிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பே வழங்கப்படவில்லை. தங்களுக்குப் பொறுப்பு மறுக்கப்பட்டதாலும், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட கடுமையான அதிருப்தி காரணமாகவே இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகத் தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: “திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!
திருச்சி மாவட்டக் கூட்டம் இத்தகைய சலசலப்புகளுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதியத்திற்கு மேல் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. திருச்சியில் முக்கிய மாஜிக்கள் இபிஎஸ்-ஸின் அதிகாரப்பூர்வ கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது, அதிமுகவின் உட்கட்சிப் பூசல் இன்னும் ஓயவில்லை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.