நுங்கம்பாக்கத்தில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. புறநகர் ரயில் சேவை பாதிப்பு.. பரபரப்பு!!
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள், ரயில் போக்குவரத்து இல்லாத நேரங்களில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் அனைத்தும் இயங்கி முடித்த பிறகு, தண்டவாள இணைப்பை நிரந்தரமாகச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், அந்த மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பொதுவாகவே காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை, அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நேரமாகும். இந்த முக்கியமான நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரந்து வந்து, தற்காலிக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் ரயில்கள் தடையின்றி இயங்குவதற்கு ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
