AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தவெக கல்வி விருது விழா.. முதலமைச்சராக மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்..!!

சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தவெக-வின் மாவட்ட செயலாளர்கள் தத்தமது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விவரங்களைச் சேகரித்துச் சரிபார்த்தனர்.

தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தவெக கல்வி விருது விழா.. முதலமைச்சராக மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்..!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Jul 2026 11:07 AM IST

சென்னை, ஜூலை 08: தமிழக வெற்றிக் கழகத்தின் மிக முக்கியமான மற்றும் அடையாளமாக மாறிவிட்ட ‘கல்வி விருது வழங்கும் விழா’ நடப்பு 2026-ஆம் ஆண்டிற்காக மிக பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்குத் தவெக சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான விழா வரும் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?

முதலமைச்சராகப் பங்கேற்கும் விஜய்:

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கல்வி விருது விழா அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கட்சியின் தலைவராக மட்டுமே மாணவர்களைச் சந்தித்த விஜய், இந்த முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது அதிகாரப்பூர்வ புதிய அந்தஸ்தில் மாணவர்களைச் சந்திக்க மேடையேறுகிறார். இதன் காரணமாக, முதலமைச்சருக்கான உயர்நிலை மாநிலப் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் இவ்விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது

ஒரே கட்டமாகச் சென்னையில் நடத்தத் திட்டம்:

கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாகத் தவெக இந்த விழாவை நடத்தியது. ஆனால், இந்த முறை தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களைச் சென்னைக்கு வரவழைத்து, ஒரே கட்டமாகப் பிரம்மாண்ட அரங்கில் இந்த விழாவை நடத்தி முடிக்கத் தவெக தலைமை உத்தேசித்துள்ளது.

தயாரான 234 தொகுதிகளின் விவரப் பட்டியல்:

சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தவெக-வின் மாவட்ட செயலாளர்கள் தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விவரங்களைச் சேகரித்துச் சரிபார்த்தனர். இந்தப் பட்டியல்கள் அனைத்தும் தற்பொழுது சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டு, இறுதிப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கமான தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களோடு சேர்த்து, இந்த முறை கடினமான சூழலில் படித்துச் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், உடல் சவால்களைத் தாண்டி அதிக மதிப்பெண்கள் குவித்த மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் ஆகியோரைத் தனித்தனியாகக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்

ரொக்க பரிசு மற்றும் தங்க நாணயம்:

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய், சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு நேரில் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துச் சான்றிதழ்களை வழங்குவதோடு, அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்க உள்ளார். மேலும், வழக்கம் போல மாணவர்களுடன் தனித்தனியாக அவர் குழுப் புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களோடு நடத்தும் முதல் பிரம்மாண்ட நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இது என்பதால், தவெக நிர்வாகிகள் இதற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us