தொடர் பலி வாங்கும் தொப்பூர் சாலை… பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
Salem Accident: சேலம் மாவட்டத்தில் தொப்பூர் சாலையில் கார் மீது மீன் லாரி மோதியதில் காரில் பயணித்த 5 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள குதிரைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது உறவினர் சந்தானம். இவர்கள் மூன்று பேரும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு மண்டல பூஜை நிகழ்வுக்கு தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். இவர்களுடன், மேச்சேரி பகுதியில் இருந்து கோவில் அர்ச்சகர்கள் நவீன், செந்தில்குமார் ஆகிய 5 பேர் காரில் சென்றனர். அங்கு, மண்டல பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் காரில் சொந்த ஊர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, தொப்பூர்- மேச்சேரி சாலையில் தெத்திரிகிரிப்பட்டி அருகே அவர்களது கார் வந்தபோது, எதிர் திசையில் ஆந்திர மாநிலத்துக்கு மீன்கள் ஏற்றுவதற்காக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
சம்பவ இடத்தில் பறிபோன இரு உயிர்கள்
இந்த கொடூர விபத்தில் காரை ஓட்டிய செந்தில் குமார் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி கிடந்தனர். விபத்தில் சிக்கிய லாரி நிலைத்தழுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை ஓட்டி வந்த கூனாண்டியூரை சேர்ந்த ஓட்டுநர் பூவரசனும் பலத்த காயமடைந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து அண்மையில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் அதிர்ச்சி: மனைவி மீது கணவர் ஆசிட் தாக்குதல்




அவசர சிகிச்சை பெற்று வரும் 4 பேர்
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உள்பட 4 பேரை மீட்டு அவசர ஊர்தி மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செந்தில்குமார் மற்றும் நவீன் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் மேச்சேரி காவல் ஆய்வாளர் மகேந்திரன், உதவி ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக மேச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்று விட்டு திரும்பிய போது, நிகழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தது அவர்களது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!