வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்ததா.. இருவர் கைது – போலீசார் விசாரணை!
Nellai Lawyer Hacked Death : திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவரை சாலையில் ஓட ஓட விரட்டி சென்று மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. இதில், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசாரி விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி மகன் பூலுடையார் என்ற பாண்டி ( 35 வயது). வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜ லட்சுமி ( 31 வயது). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் பாளையங்கோட்டை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள டி.வி.எஸ். நகரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பூலுடையார் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 1- ஆம் தேதி மீண்டும் தம்பதியிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு முற்றியதாக தெரிகிறது. இதில், மனம் உடைந்த ராஜ லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு, அவரது கணவர் தான் காரணம் என கூறி அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓட ஓட விரட்டி வழக்கறிஞர் வெட்டி கொலை
இந்த நிலையில், கடம்போடுவாழ்வு வீட்டில் பூலுடையார் இருந்த போது திடீரென காரில் வந்த மறுமண நபர்கள், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கர ஆயுதங்களால் வழக்கறிஞரை வெட்ட முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூலுடையார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருந்தாலும், அவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில், ரத்த வெள்ளத்தில் வழக்கறிஞர் பூலுடையார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பூலுடையார் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
மேலும் படிக்க: மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..




களக்காடு போலீசார் தொடர் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, பூலுடையார் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பூலுடையாருக்கும், ராஜலட்சுமிக்கும் கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கூடுதல் வரதட்சனை கேட்டு சித்தரவதை
திருமணத்தின் போது 70 பவுன் நகை, பல லட்சம் ரூபாய் வரதட்சணை வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், கூடுதல் வரதட்சனை கேட்டு ராஜலட்சுமியிடம், பூலுடையார் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்டதும், இதற்கு பலி வாங்கும் நோக்கில் அவரது தம்பி அருணாச்சல ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான ராம் உள்ளிட்டோர் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அருணாச்சல ராஜா மற்றும் ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அதிர்வுகள்.. தவெகவின் அதீத எழுச்சி.. பின்னடைவைச் சந்தித்தது திமுகவா.. அதிமுகவா?..