40 ஏக்கர் மைதானம்.. 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட பிரச்சாரம்!!
CM Vijay Maduranthakam Campaign: மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை பிரம்மாண்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே 40 ஏக்கர் பரப்பளவில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், QR குறியீடு அனுமதி சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை சட்டஒழுங்கு ஏடிஜிபி ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு, செப்.25: தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று மாலை மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். தேர்தல் களத்தில் முதன்முறையாகத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விஜயின் வருகை, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மதுராந்தகம் பகுதியில் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு மண்டலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!
5,000 பேருக்கு மட்டுமே QR கோட் அனுமதி:
இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் இந்த மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக, மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, QR கோடு அடங்கிய அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே கூட்டரங்கிற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமையர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுக்கூட்ட மைதானத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கிய காவல் துறை:
கூட்டத்திற்கான அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறைகள், மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் இரவு பகலாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்கள் திரளும் என்பதால் ஆத்தூர் சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டஒழுங்கு ஏடிஜிபி அன்பு, விழா நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் ஜனவரி மாதத்துக்குள் தவெக ஆட்சி கவிழும்.. திமுக ஆட்சியமைக்கும்.. ஆர். எஸ். பாரதி!
மைதானம் மாற்றம், உட்கட்டமைப்பு வசதிகள்:
முன்னதாக, அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலைப் பகுதிக்கு அருகே பிரச்சாரக் கூட்டத்திற்கான இடத்தை அக்கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்து சமன் செய்யும் பணிகளைத் தொடங்கி இருந்தனர். இருப்பினும், 10 ஏக்கர் அளவிலான அந்த மைதானம் விஜயின் பிரச்சாரத்திற்குப் போதுமானதாக இருக்காது என்றும், மலைப் பகுதியையொட்டி அமைந்திருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல் துறை சுட்டிக்காட்டியது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி கூட்டம் நடைபெறும் இடம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள 40 ஏக்கர் பிரம்மாண்ட நிலத்திற்கு மாற்றப்பட்டது. மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தற்காலிகப் பந்தல்கள், பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகள் மற்றும் வாகனங்களுக்கான பிரத்யேக நிறுத்தப் பகுதிகளும் இங்கு விரிவாக உருவாக்கப்பட்டுள்ளன.