திருப்பூரில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெக தொண்டர்களால் பரபரப்பு – காரணம் என்ன தெரியுமா?
TVK Internal Dispute: திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் திறந்து வைக்க வந்தார். அப்போது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கவில்லை எனக்கூறி அக்கட்சியின் தொண்டர்கள் செங்கோட்டையனை முற்றுகையிட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர், ஜனவரி 1 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிதாக விஜய்யின் (Vijay)தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்குகிறது. இந்த நிலையில் அக்கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் மறுக்கப்படுவதாக தொண்டர்களிடம் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அக்கட்சியின் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கவில்லை என சமீபத்தில் அக்கட்சியின் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனை தவெக தொண்டர்களால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியின் போது அக்கட்சி நிர்வாகிகள் செங்கோட்டையனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக கட்சியின் முக்கிய தலைவர் செங்கோட்டையன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினரே அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பியதால் அந்த பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!




திருப்பூர் மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கோரி அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளகோவில் பகுதியில் தவெக கட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சிக்காக ஜனவரி 1, 2026 அன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வந்திருந்தார். அந்த நேரத்தில், தவெகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரைச் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் தங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
தோல்வியில் முடிந்த சமாதான முயற்சி
இதுகுறித்து தவெக உறுப்பினர்கள் கூறுகையில், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்கள் பலர் உள்ளதாகவும், கட்சி தொடங்கிய பின்னர் அந்த நபர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். குறிப்பாக, வெள்ளகோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக உழைத்தவர்களுக்கு தவெகவில் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : 2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!
மேலும், இளைஞர் அணியில் தங்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செங்கோட்டையனிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள், நிலைமையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். செங்கோட்டையனும், உரிய நேரத்தில் கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்து, அவர்களை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், தவெக உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக, அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.